முகமூடி அணிந்து வந்து பெண்ணிடம் சங்கிலி பறித்த கொள்ளையன்


முகமூடி அணிந்து வந்து பெண்ணிடம் சங்கிலி பறித்த கொள்ளையன்
x

வந்தவாசியில் ஜட்டியுடன், முகமூடி அணிந்து வந்த கொள்ளையன் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறித்துக்கொண்டு, 2 பேரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடினான்.

திருவண்ணாமலை

வந்தவாசியில் ஜட்டியுடன், முகமூடி அணிந்து வந்த கொள்ளையன் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறித்துக்கொண்டு, 2 பேரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடினான். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜட்டியுடன் வந்த கொள்ளையன்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள ராஜீவ்காந்தி நகர் பக்தவச்சலம் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 42). இரு சக்கர வாகன மெக்கானிக். இவரது மனைவி ஜெயந்தி (35). இவர்களுக்கு சசிகலா (9) என்ற மகளும், கிஷோர் (5) என்ற மகனும் உள்ளனர்.

சிறுமி சசிகலாவுக்கு நேற்று 9-வது பிறந்தநாள் விழா கொண்டாடினர். இதற்காக காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மானாமதியை சேர்ந்த பிரபுவின் மாமியார் ஜோதி அம்மாள் (60) வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு சிறுமி பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியதை தொடர்ந்து விழாவுக்கு வந்த ஜோதி அம்மாள் உள்பட அனைவரும் வீட்டின் மாடியில் படுத்து தூங்கினர்.

சங்கிலி பறிப்பு

இரவு சுமார் 11 மணியளவில் ஜட்டியுடன், முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் சுவர் ஏறி குதித்து மாடிக்கு வந்தார். அவர் ஜோதி அம்மாளின் கழுத்தில் இருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோதி அம்மாள் கூச்சலிட்டுள்ளார்.

உடனே அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். சத்தம் கேட்டு ஓடி வந்த பிரபு, மர்ம நபரை மடக்கி பிடிக்க முயன்றார். அப்போது கொள்ளையன் தன் கையில் இருந்த கத்தியால் பிரபுவை வெட்டிவிட்டு, என்னை பின் தொடர்ந்தால் உன்னை கொன்று விடுவேன் என்று கூறிவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

கத்திவெட்டு

அதேபோன்று அருகில் உள்ள வந்தவாசியை அடுத்த செல்லாவரம் கிராமத்திற்கு முகமூடி கொள்ளையன் சென்றுள்ளான். அங்கு ரங்கன் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அங்கு ஜட்டியுடன், முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் முதல் கதவை திறந்துவிட்டு, இரண்டாவது கதவின் பூட்டை உடைக்க முயன்றார். சத்தம் கேட்டு ஓடி வந்த ரங்கன் மர்ம நபரை மடக்கி பிடிக்க முயன்றார்.

அப்போது கொள்ளையன் கையில் வைத்திருந்த கத்தியால் ரங்கனை தலையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். படுகாயம் அடைந்த ரங்கன் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் 9 தையல் போடப்பட்டுள்ளது.

ஒரேநாள்இரவில் வந்தவாசி பகுதியில் இரண்டு இடங்களில் முகமூடி, ஜட்டியுடன் வந்த மர்ம நபர் நகையை திருடிக்கொண்டு, 2 நபர்களை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் வந்தவாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கத்தியை காட்டி மிரட்டல்

கொள்ளையன் வெட்டியதில் காயமடைந்த ரங்கன் கூறுகையில், நான் குடும்பத்துடன் வீட்டு மாடியில் உறங்கிக் கொண்டிருந்தேன். அதிகாலை 3.30 மணி அளவில் கதவின் பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டு கீழே இறங்கி வந்து பார்த்தபோது முகமூடி அணிந்து ஜட்டியுடன் நின்ற ஒருவர் கத்தியை காட்டி மிரட்டினார். நீ உயிரோடு இருக்க வேண்டும் என்றால் என்னை பின்தொடராதே என்று என்னை தலையில் வெட்டிவிட்டு ஓடிவிட்டார். அவர் குண்டாக கருப்பாக இருந்தார் என்றார்.

மெக்கானிக் பிரபு கூறுகையில், நான் குழந்தைகள், மாமியாருடன் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தேன். அப்பொழுது சுவர் ஏறி மாடிக்கு வந்த நபர் என் மாமியார் அணிந்திருந்த இரண்டு பவுன் நகையை பறித்தான். அவனை பிடிக்க முயற்சி செய்தபோது அவன் வைத்திருந்த கத்தியால் என் கையில் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டான். அவன் ஜட்டியுடன் முகமூடி அணிந்திருந்தான் என்றார்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story