பகவதி அம்மன் கோவில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையர்கள்


பகவதி அம்மன் கோவில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையர்கள்
x
தினத்தந்தி 4 Jan 2023 12:15 AM IST (Updated: 4 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தாடிக்கொம்பு பகவதி அம்மன் கோவிலில், இரும்பு உண்டியலை கொள்ளையர்கள் தூக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

கோவில் உண்டியல் திருட்டு

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு சந்தைதிடல் அருகே பகவதியம்மன் கோவில் உள்ளது. தினமும் இந்த கோவிலில் பூஜை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மார்கழி மாதம் என்பதால், திருவிளக்கு வழிபாடும் நடைபெறுகிறது.

நேற்று முன்தினம் இரவு கோவிலை பூசாரி பரமசிவம் பூட்டி விட்டு சென்றார். அதன்பிறகு நள்ளிரவில் கோவிலுக்கு மர்ம நபர்கள் வந்தனர். பின்னர் அவர்கள், கோவிலின் 2 இரும்பு கேட்டுகளையும் உடைத்து உள்ளே புகுந்தனர்.

அங்கிருந்த சில்வர் உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடினர். மேலும் சன்னதி முன்பு இருந்த மற்றொரு இரும்பு உண்டியலை உடைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதனால் அந்த உண்டியலை தூக்கி சென்றனர்.

வெள்ளி நகைகள்

திருடப்பட்ட உண்டியல், சுமார் 60 கிலோ எடை உடையது ஆகும். அதனை, ஒருவர் மட்டும் தூக்கி செல்ல இயலாது. இதனால் ஒன்றுக்கும் மேற்பட்டோர் இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மேலும் உண்டியலை மோட்டார் சைக்கிளில் எடுத்து செல்ல முடியாது. இதனால் உண்டியலை எடுத்து செல்ல கார், ஆட்டோ அல்லது சரக்கு வாகனத்தை பயன்படுத்தி இருக்கலாம்.

இதேபோல் மூலஸ்தானத்தில் உள்ள இரும்பு லாக்கரை கொள்ளையர்கள் உடைக்க முயன்றனர். அதனை உடைக்க முடியாததால், அதில் இருந்த வெள்ளி கவசம் மற்றும் நகைகள் தப்பின.

போலீஸ் விசாரணை

இந்தநிலையில் நேற்று காலை திருவிளக்கு வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கோவில் கதவு திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது ஒரு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டதையும், மற்றொரு உண்டியல் மாயமாகி இருந்ததையும் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

கண்காணிப்பு கேமரா

உண்டியல் திருடப்பட்ட கோவிலுக்கு காவலாளி கிடையாது. மேலும் கோவிலில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படவில்லை. அந்த கோவிலின் முன்பு நள்ளிரவு வரை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உட்கார்ந்து இருப்பது வாடிக்கை ஆகும்.

இதனை நோட்டமிட்டு உண்டியலை கொள்ளையர்கள் தூக்கி சென்று கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. இதற்கிடையே கோவிலுக்கு அருகில் வீடுகள், கடைகள் உள்ளன.

அங்குள்ள நகை கடை ஒன்றில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதனை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

உடைக்க முடியாததால், கோவில் உண்டியலை கொள்ளையர்கள் தூக்கி சென்ற சம்பவம் தாடிக்கொம்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story