விருத்தாசலம் அருகே தீ விபத்து:கூரை வீடு எரிந்து சாம்பல்
விருத்தாசலம் அருகே தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சாம்பலானது.
கம்மாபுரம்,
விருத்தாசலம் அருகே உள்ள பொன்னாலகரத்தை சேர்ந்தவர் பூவராகவன். இவரது மனைவி பிரியா (வயது 28). நேற்று காலை பிரியா வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் 11 மணி அளவில் பிரியாவின் கூரை வீடு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியாததால், ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்திற்கும், விருத்தாசலம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கூரை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும் வீட்டில் இருந்த ரூ.31 ஆயிரம் ரொக்கம், வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஊ.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா?, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.