தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மாணவன் படுகாயம்


திருவாரூர் அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து படுகாயம் அடைந்த மாணவனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர்

திருவாரூர் அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து படுகாயம் அடைந்த மாணவனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொகுப்பு வீடு

திருவாரூர் அருகே அலிவலம் ஊராட்சி கோவில்பத்து கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 22-க்கும் மேற்பட்ட அரசின் மூலம் கட்டி கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளன. இவை அனைத்தும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

கட்டிடங்கள் கட்டி நீண்ட காலம் ஆவதால் வீடுகள் சற்று பழுதடைந்து பலவீனமாக இருந்து வருகிறது. இந்த தொகுப்பு வீட்டில் கூலி தொழிலாளியான வீரக்குமார் என்பவர், தனது மனைவி பரிமளா, மகன் ஆனந்த் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். ஆனந்த் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான்.

மேற்கூரை இடிந்து விழுந்தது

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீரக்குமார் தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவருடைய வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் அவரது மகன் ஆனந்த் படுகாயம் அடைந்தார்.

உடனடியாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மாணவருக்கு தீவிர சிகிச்சை

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவில்பத்து கிராமத்தில் உள்ள 2 தொகுப்பு வீடுகள் அனைத்தும் சேதமடைந்து எந்த நேரத்திலும் இடியும் நிலையில் உள்ளது.

ஏற்கனவே பலமுறை ஒரு சில வீடுகளின் மேற்கூரை மற்றும் வீடுகள் இடிந்து விழுந்து சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் காயமடைந்துள்ளனர் முற்றிலுமாக இந்த அரசு தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிதாக கட்டித் தர வேண்டும் என பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

புதிதாக கட்டித்தர வேண்டும்

தற்பொழுது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரு மாணவன் படுகாயம் அடைந்த நிலையில் இனியாவது யாரும் பாதிக்கப்படாத வகையில் உடனடியாக அனைத்து வீடுகளையும் இடித்து விட்டு புதிதாக கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story