கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து மளிகை கடைக்காரர் பலி
நெல்லை அருகே கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து மளிகை கடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை அருகே கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து மளிகை கடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.
மளிகை கடைக்காரர்
நெல்லை அருகே உள்ள தாழையூத்து சர்க்கிள் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் தனசேகர் (வயது 60). இவர் சங்கர்நகர்-தென்கலம் சாலையில் ஒரு வணிக வளாகத்தில் மளிகை கடை நடத்தி வந்தார்.
இவரது கடையின் அருகே பேக்கரி மற்றும் மருந்தகம் உள்ளது. இதன் மேல் தளத்தில் 6 கடைகள் பூட்டி கிடக்கின்றன. இந்த வணிக வளாகம் ஆங்காங்கே விரிசல் விழுந்து காணப்பட்டது. இதனால் மேல் தளத்தில் உள்ள 6 கடைகளும் காலி செய்யப்பட்டன.
நடைபாதை இடிந்து விழுந்தது
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி தனசேகர் மளிகை கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு செல்ல கடையின் முகப்பு பகுதிக்கு வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மேல் தளத்தில் உள்ள கடைகளுக்கு செல்லும் நடைபாதை இடிந்து விழுந்தது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த தனசேகர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததில் மளிகை கடைக்காரர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.