அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது


அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது
x

கறம்பக்குடி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. விடுமுறை நாளில் நிகழ்ந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

புதுக்கோட்டை

அரசு மேல்நிலைப்பள்ளி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 740 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் கட்டிடம் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு பழுதடைந்த நிலையில் உள்ளது. தரைகள், படிக்கட்டுகள், சுவர்கள் என கட்டிடத்தின் பலபகுதிகளில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்த நிலையிலேயே இருந்து வந்தன. இருப்பினும் மாணவர்கள் இந்த கட்டிடத்திலேயே படித்து வந்தனர்.

ேமற்கூரை இடிந்து விழுந்தது

இந்தநிலையில் மழை காரணமாக கடந்த 3 நாட்களாக பள்ளி செயல்படவில்லை. நேற்று காலை பள்ளியை திறந்த போது ஒரு வகுப்பறையின் மேற்கூரை இடிந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து தரையில் விழுந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் இதுகுறித்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு சென்று பார்த்த ஆசிரியர்கள் மாணவர்களை அந்த கட்டிடத்திற்குள் செல்லாமல் தடுத்து வேறு வகுப்பறைக்கு கூட்டி சென்றனர்.

கறம்பக்குடி பகுதியில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து கொட்டிய சம்பவம் பெற்றோர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. விடுமுறை நாளில் சம்பவம் நிகழ்ந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடம் கட்டியபோதே தரமற்ற நிலையில் இருந்தது. கட்டிடம் ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கறம்பக்குடி பகுதியில் பள்ளி கட்டிடங்கள் இடிந்து விழுவது தொடர் சம்பவமாகி வருகிறது.

இந்த கல்வி ஆண்டில் மட்டும் 5 பள்ளி கட்டிடங்கள் இடிந்து கொட்டி உள்ளன. எனவே பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து இடித்து அகற்ற வேண்டும். மேலும் தரமற்ற கட்டிடத்தை கட்டிய ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.


Next Story