வாடிப்பட்டி அருகே வருவாய் ஆய்வாளர் அலுவலக மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது
வாடிப்பட்டி அருகே வருவாய் ஆய்வாளர் அலுவலக மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி அருகே நீரேத்தான் கிராமவருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஜெமினிபூங்கா முன்பு உள்ளது. இந்த அலுவலகம் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. 20 செண்டு அளவில் நான்கு புறமும் முள்வேலி அமைக்கப்பட்டு உள்ளது. பெருமாள்கோவில் தெப்பத்தின் மேற்பகுதியில் குடியிருப்பு டன் அலுவலகம் கட்டப்பட்டு வருவாய் ஆய்வாளர்கள் வசித்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பெய்த மழையில் இந்தஅலுவலகம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. இந்த நிலையில் தற்போது அசோக்குமார் வருவாய் ஆய்வாளராக பணிசெய்து வருகிறார். நேற்றுமதியம் 1 மணிஅளவில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் தாதம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஜெயராஜ், கிராம உதவியாளர் சண்முகம் ஆகியோர் வருவாய்ஆய்வாளர் அசோக்குமாரிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது செல்போன் அழைப்பு வரவே அசோக்குமார் வெளியே சென்றார். அப்போது திடீரென மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. அதை பார்த்த ஜெயராஜ், சண்முகம் 2 பேரும் வெளியே ஓடிவந்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் கூறியதாவது.- கட்டிடம் முழுவதையும் இடித்துவிட்டு புதிதாக கட்டுவதற்கு மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. பணி விரைவில் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் தகவல் அறிந்த வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.