குப்பை கொட்டும் இடத்தை சுத்தம் செய்து கோலம் போடப்பட்டது
குப்பை கொட்டும் இடத்தை சுத்தம் செய்து கோலம் போடப்பட்டது
திருச்சி மாநகர பொதுமக்கள் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க முடியாமல் மாநகராட்சி திணறி வருகிறது. இதையடுத்து குப்பை கொட்டும் பகுதிகளில் மாநகராட்சி சார்பில் சுத்தம் செய்து கோலம் போடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தெருக்களில் அசுத்தம் செய்வதை தடுக்க, குப்பை கொட்டும் இடங்களில் கோலம் போடும் திட்டத்தை முதலில் 5 வார்டுகளில் செயல்படுத்தி, பின்னர் மாநகர் முழுவதும் இதனை விரிவுபடுத்த மாநகராட்சி முடிவு செய்தது. பொது இடங்களில் உள்ள குப்பை மேடுகளை சுத்தம் செய்வதுடன், அப்பகுதி மக்களை மீண்டும் குப்பை கொட்டாமல் தடுக்க இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று முன்தினம் திருச்சி காட்டூர் பகுதியில் குப்பை கொட்டும் இடத்தில் துப்புரவு பணியாளர்களால் கோலங்கள் போடப்பட்டன. இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், மினி லாரிகள் 2 நாட்களுக்கு ஒரு முறை குப்பை அள்ள சென்று வருகிறது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெருக்களில் குப்பை கொட்டுவதை தடுக்க முடியவில்லை. இதனால் குப்பை கொட்டும் பகுதிகளில் கோலம் போடுவதன் மூலம் அந்த இடம் நாள் முழுவதும் சுத்தமாக இருக்கிறது. தெருக்களை சுத்தமாக வைத்திருக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.