ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.
தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமையில் வளர்ச்சித்துறை அலுவலர்களில் மொத்தம் 346 பேரில், 148 பேர் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வளர்ச்சித்துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலங்கடந்த ஆய்வுகள், விடுமுறை தின, இரவு நேர ஆய்வுகள், வாட்ஸ்-அப், காணொலி ஆய்வுகள் முற்றிலுமாக கைவிட வேண்டும். ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல், அவர்களுக்கு விடுபட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி இயக்குனர்களுக்கு கடந்த 2017-ல் வெளியிடப்பட்ட அரசாணையின் படி, இளநிலை உதவியாளர்களுக்கான ஊதியம் வழங்கி, பணிவரன் முறை செய்திட வேண்டும்.
காலிப்பணியிடங்கள்
வளர்ச்சித்துறை காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய பணியிடங்களை நிரப்பிட வேண்டும். முழு சுகாதார திட்ட மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் மேம்படுத்த ஊதியம் வழங்கி, பணிவரன் முறை செய்திட வேண்டும். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டம் உள்ளிட்ட திட்ட பணிகளை மேற்கொள்ள போதுமான ஊழியர் கட்டமைப்பினை உருவாக்குதல் வேண்டும்.
பொறியியல் பிரிவில் தொழில்நுட்ப உதவியாளர்களாக பணிபுரிந்து வந்த ஊழியர்கள் பதிவறை எழுத்தர்கள் நிலையில் பணியமர்த்தப்பட்ட பிறகு பல ஆண்டுகளுக்கு பின்னர் தொழில்நுட்ப உதவியாளர்களாக 10 ஆண்டுகள் பணியினை நிறைவு செய்யவில்லை என்று பணிநீக்கம் செய்ய மேற்கொள்ளும் முயற்சியை கைவிட்டு, அவர்களை பணிவரன் முறைப்படுத்துதல் வேண்டும்.
இன்றும் போராட்டம்
உதவி இயக்குனர், உதவி பொறியாளர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் நிலை பதவி உயர்வு ஆணைகளை கால தாமதமின்றி வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி வளர்ச்சித்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் இந்த போராட்டத்தினால் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களிலும், பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லையென்றால் அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.