குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். குளிர்ந்த காற்று வேகமாக வீசும். இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டும். இந்த சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வந்து செல்வார்கள். இந்த ஆண்டு சீசன் தாமதமாக ஜூன் மாத இறுதியில் தொடங்கியது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழையினால் இங்குள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தொடர்ச்சியாக 5 நாட்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் 5 நாட்களுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு குறைந்ததும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ச்சியாக தடை விதிக்கப்பட்டதால் இங்கு தங்கி இருந்த சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் தங்களது ஊர்களுக்கு திரும்பி சென்று விட்டனர். எனவே நேற்று குற்றாலம் அருவிகளில் அதிக அளவில் தண்ணீர் ஆப்பரித்துக் கொட்டிய போதிலும், குறைவான சுற்றுலா பயணிகளே வந்தனர். இதனால் அவர்கள் உற்சாகத்துடன் நெருக்கடி இன்றி குளித்து சென்றனர்.