தமிழகத்தில் மது விற்பனைக்கு தடைவிதிக்க நேரிடும்


தமிழகத்தில் மது விற்பனைக்கு தடைவிதிக்க நேரிடும்
x

சீருடைகளுடன் மாணவர்கள் மது அருந்தும் புகைப்படங்கள் அதிர்ச்சியைத் தருகின்றன. இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணாவிட்டால் தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என்று மதுரை ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.

மதுரை

சீருடைகளுடன் மாணவர்கள் மது அருந்தும் புகைப்படங்கள் அதிர்ச்சியைத் தருகின்றன. இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணாவிட்டால் தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என்று மதுரை ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.

மது போதையால் பிரச்சினை

திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2019-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனையில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் மது அருந்தும் பழக்கம் 46.7 சதவீதமாக உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவை பொறுத்த வரையில் இது, 36 சதவீதம் ஆகும். முக்கியமாக, மது அருந்தும் பழக்கத்தில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.

மது பழக்கத்தால் குடும்பப்பிரச்சினை, நிம்மதியின்மை, உடல் நலக்குறைவு உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 வரை செயல்படுகின்றன. இரவில் போதையில் வாகனத்தில் செல்பவர்கள் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.

மது விற்பனைக்கு எதிராகவும், மதுக்கடைகளை மூடவும் வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடக்கின்றன. இருப்பினும் மது விற்பனை அதிகரித்து கொண்டே தான் உள்ளது.

விற்பனை நேரத்தை குறையுங்கள்

எனவே தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடைவிதிக்க வேண்டும். மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த அறிவிப்புகளை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் அறிவிப்பு பலகைகளை ஆங்காங்கே வைக்கவும், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலைப்பட்டியல் வைக்கவும் உத்தரவிட வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், மது விற்பனைக்கு ரசீது அளிக்கவும், உரிய விலையை விட கூடுதல் தொகைக்கு மது விற்றால் புகார் அளிக்க உயர் அதிகாரிகளின் செல்போன் எண் மற்றும் விவரங்களை டாஸ்மாக் கடைகளில் எழுதி வைக்கவும், மதுபானத்தில் கலந்துள்ள பொருட்கள் மற்றும் தயாரிப்பாளர் விவரங்களை மதுபாட்டில்களில் தமிழில் குறிப்பிட வேண்டும் என்றும், டாஸ்மாக் மது விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இதுகுறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.

நீதிபதிகள் எச்சரிக்கை

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், மாணவர்கள் சீருடையுடன் மது அருந்துவது, மதுபாட்டில்கள் வாங்குவது, மது அருந்திவிட்டு பிரச்சினையில் ஈடுபடுவது தொடர்பான புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

இவற்றைப் பார்த்த நீதிபதிகள், சீருடைகளுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படங்கள் அதிர்ச்சியை தருகின்றன. நாம் எதை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியை இந்த புகைப்படங்கள் எழுப்பியுள்ளன. இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். இல்லையென்றால் மாவட்ட கலெக்டர்களும், உரிய அதிகாரிகளும் இந்த கோர்ட்டில் ஆஜராக நேரிடும். அதுமட்டுமல்ல, டாஸ்மாக் மது விற்பனைக்கும் தடைவிதிக்க நேரிடும் என்று எச்சரித்தனர்.

பின்னர், பல்வேறு தகவல்களுடன் இந்த வழக்கை தாக்கல் செய்த மனுதாரரை இந்த கோர்ட்டு பாராட்டுகிறது. இந்த வழக்கு சம்பந்தமாக மேலும் பல தகவல்களை திரட்டி, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

இந்த வழக்கு குறித்து அரசு தரப்பில் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.


Related Tags :
Next Story