இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியது:கடலூரில், பதநீர் விற்பனை அமோகம்


இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியது:கடலூரில், பதநீர் விற்பனை அமோகம்
x

கடலூரில், இந்த ஆண்டு முன்கூட்டியே பதநீர் விற்பனை தொடங்கியது.

கடலூர்


பனை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களுமே ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இதனால் தான் இதை கற்பக தரு என்று அழைக்கிறார்கள். இந்த பனையில் இருந்து கிடைக்கும் ஓலை, நார், நுங்கு, பனங்கிழங்கு, பனை நாரில் இருந்து தயாரிக்கப்படும் உறி. பதநீர், பனங்கற்கண்டு என அனைத்தும் பயன்தரக்கூடியது.

இதில் பதநீர் சுவையானது. உடலுக்கு குளிர்ச்சியை தரும். பதநீர் அருந்துவதால், உடலில் உள்ள எலும்புகள் வலுவடையும். மருத்துவ குணம் கொண்ட இந்த பதநீர் கோடை காலத்தில் ஏற்படும் அம்மை நோயை கட்டுப்படுத்தும். வயிற்றுப்புண், வயிற்று எரிச்சல் போன்ற நோய்கள் குணமடைகிறது.

200 மி.லி. ரூ.20-க்கு விற்பனை

இதனால் தான் பதநீரை பொதுமக்கள் கோடைக்காலங்களில் அதிகம் வாங்கி அருந்துகின்றனர். இந்த பதநீர் விற்பனை கடலூர் பீச்ரோட்டில் உள்ள தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையமான கடலூர் மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் ஆண்டுதோறும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பிப்ரவரி மாதம் தொடங்கி மே அல்லது ஜூன் முதல் வாரம் வரை பதநீர் இறக்கப்பட்டு, அவை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது 200 மில்லி ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வழக்கமாக நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 300 லிட்டர் வரை பதநீர் இறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பதநீர் அதிகமாக கிடைக்கும் நாட்களில் அதை காய்ச்சி பனைவெல்லமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

முன்கூட்டியே தொடங்கியது

அதன்படி இந்த ஆண்டிற்கான பதநீர் விற்பனை முன்கூட்டியே தொடங்கி விட்டது. அதாவது ஜனவரி மாதம் தொடக்கத்தில் இருந்தே பதநீர் விற்பனை தொடங்கியது. ஆரம்பத்தில் 50 லிட்டர், 60 லிட்டர் என கிடைத்து வந்த பதநீர் தற்போது 100 லிட்டரை கடந்து கிடைக்கிறது. இதை திருச்செந்தூரில் இருந்து பனை இறக்கும் தொழி லாளர்களை வரவழைத்து, பனை மரங்களில் இருந்து பதநீர் தினந்தோறும் இறக்கி விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் 200 மில்லி லிட்டர் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பதநீர் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, கடலூர் அண்ணா பாலம், பனை பொருள் பயிற்சி நிலையம் ஆகிய இடங் களில் முதல் கட்டமாக விற்பனை செய்யப்படுகிறது. இது பற்றி மண்டல பனை பொருள் பயிற்சி நிலைய முதல்வர் கணபதி கூறுகையில், ஆண்டுதோறும் இங்கு பதநீர் இறக்கி, விற்பனை செய்து வருகிறோம். இந்த ஆண்டு திருச்செந்தூரில் இருந்து தொழிலாளர்களை வரவழைத்து பனை மரங்களில் இருந்து பதநீர் இறக்கி விற்பனை செய்கிறோம். வழக்கமாக இல்லாமல் இந்த ஆண்டு முன்கூட்டியே பதநீர் விற்பனையை தொடங்கி விட்டோம். பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

மருந்து

இந்த பதநீர் கோடை காலத்தில் உடலில் உள்ள உஷ்ணத்தை குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியை தரும். மேலும் மஞ்சள் காமாலை, அல்சர் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாக விளங்குகிறது. ஊட்டச்சத்துகள் நிறைந்தது. நாள் ஒன்றுக்கு 300 லிட்டர் வரை பதநீர் கிடைக்கும். இப்போது 101 லிட்டர் கிடைக்கிறது. இது மேலும் அதிகரிக்கும். மற்ற குளிர்பானங்களை காட்டிலும் இயற்கையாக கிடைக்கும் இந்த பதநீர் எல்லா வகையிலும் சிறந்தது. பதநீர் விற்பனைக்கு கூடுதலாக ஆட்களை நியமிக்க இருக்கிறோம் என்றார்.


Next Story