மழைநீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்கள் அழுகின
வைத்தீஸ்வரன் கோவில் அருகே மழைநீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்கள் அழுகியதால் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
சீர்காழி:
வைத்தீஸ்வரன் கோவில் அருகே மழைநீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்கள் அழுகியதால் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
சீர்காழியில் 43 செ.மீ. மழை
சீர்காழி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 43 செ.மீ. மழை பெய்தது. இதன் காரணமாக சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், திருவெண்காடு, திருமுல்லைவாசல், மாதானம் உள்ளிட்ட பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது.இதேபோல் வைத்தீஸ்வரன் கோவில் அருகே எடக்குடி வடபாதி, தென்பாதி, கரைமேடு, காளிகாவல்புரம், தெற்கிருப்பு, கீழவெளி, சாந்தபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகி வருகிறது. இதனால் விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகின்றன.
ெநற்பயிர்கள் அழுகி விட்டன
திருமுல்லைவாசல் ராதாநல்லூர், வழுதலைக்குடி, வருஷபத்து உள்ளிட்ட கிராமங்களில் நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் மழை நீர் மற்றும் கடல் நீரில் மூழ்கி அழுகி வீணாகி விட்டது. இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில் ஆண்டுதோறும் போதிய வடிகால் வசதி இல்லாததால் எடக்குடி வடபாதி ஊராட்சியில் விவசாயம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.
நிவாரணம் வழங்க வேண்டும்
அரசு நீர்நிலைகளை முழுமையாக தூர்வார வேண்டும். பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றனர்.