போலீஸ் பாதுகாப்புடன் ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி செயல்பட தொடங்கியது போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு
போலீஸ் பாதுகாப்புடன் ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி செயல்பட தொடங்கியது.
திருவெண்ணெய்நல்லூர்,
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் கடந்த 2011-ம் ஆண்டு செயல்பட்ட மணல் குவாரியால் அளவுக்கு அதிகமான மணல் எடுக்கப்பட்டு இப்பகுதி வறண்டது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு உடைந்து போனது. இந்த நிலையில் தற்போது அரசு மணல் குவாரி அமைக்க முடிவு செய்து 11 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 963 கன மீட்டர் மணல் அள்ள சுற்றுச்சூழல் தடையின்மை சான்றும் பெறப்பட்டது. இங்கு மணல் குவாரி அமைக்க கூடாது என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு, பொதுமக்கள், விவசாயிகள் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் மணல் குவாரி அமைக்க கூடாது என தமிழக அரசுக்கு பலமுறை மனு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் ஏனாதிமங்கலம் பகுதி மக்கள் எதிர்ப்பை மீறி நேற்று முதல் தென் பெண்ணையாற்றில் மணல் குவாரி செயல்பட தொடங்கியது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் லாரிகளில் மணல் ஏற்றிச் செல்லப்பட்டு சிறுவானூர் சேமிப்பு கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கவலையடைந்த அப்பகுதி விவசாயிகள் ஓரிரு நாட்களில் மணல் குவாரியை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்றனர்.