வயலில் தெளித்த விதை நெல் மண்ணோடு மக்கிய அவலம்
கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் வயலில் தெளித்த விதை நெல் மண்ணோடு மக்கிய அவலம் ஏற்பட்டுள்ளது. முறை வைக்காமல் தண்ணீரை திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் வயலில் தெளித்த விதை நெல் மண்ணோடு மக்கிய அவலம் ஏற்பட்டுள்ளது. முறை வைக்காமல் தண்ணீரை திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெற்களஞ்சியம்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் டெல்டா மாவட்டங்களில்(தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள்) ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது குறுவை நெல் சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறுவை சாகுபடிக்காக ஆண்டு தோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
மேட்டூர் அணை
அதன்படி இந்த ஆண்டு கடந்த மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.இந்த காவிரி நீர் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்தடைந்தது. இதை தொடர்ந்து கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
நாகை மாவட்டத்தில் 38 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரானது பல்வேறு தடைகளை தாண்டி டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதியான நாகைக்கு வந்தடைந்தது.
வறண்டு கிடக்கும் வாய்க்கால்
இந்த காவிரி நீழ் முழுமையாக கடைமடை பகுதிக்கு வராததால், சில இடங்களில் விவசாயத்துக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. மேலும் சில இடங்களில் வாய்க்கால் தூர்வாரப்படாததால் திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளே வாய்க்கால்களை தூர்வாரி தண்ணீரை இறைத்து விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனாலும் நாகை அருகே வடகுடி, மேல நாகூர் தெத்தி, தலைஞாயிறு அருகே பிரிஞ்சிமூளை, வடுகூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு போதுமான அளவு தண்ணீர் வராததால் வாய்க்கால்கள் வறண்டு கிடக்கின்றன.இதனால் இந்த பகுதிகளில் விவசாய நிலங்களில் தெளிக்கப்பட்ட விதை நெல்கள் வளராமல் மண்ணோடு மக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மண்ணோடு மக்கும் விதை நெல்கள்
இதுகுறித்து பாலையூரை சேர்ந்த விவசாயி திருமேனி அழகர் கூறுகையில்,
மேட்டூர் அணை தண்ணீரை நம்பி வடகுடி, மேல நாகூர், வைரவன் இருப்பு உள்ளிட்ட பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது வயல்களில் நெல் விதைகளை தெளித்து உள்ளோம்.
20 நாட்களுக்கு மேலாகியும் காவிரி நீர், இந்த பகுதிகளுக்கு வரவில்லை. வடகுடி தெத்தி, மேல நாகூர் உள்ளிட்ட மேல் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததால் தண்ணீர் சீராக வந்து சேரவில்லை. இதன் காரணமாக வயல்களில் தெளிக்கப்பட்ட விதை நெல்கள் மண்ணோடு மக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
முறைவைக்காமல் தண்ணீர் திறக்க வேண்டும்
15 நாட்கள் முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட்டால் விதைகள் உயிர் பெற்று வளரும். எனவே முறை வைக்காமல் தண்ணீர் திறந்துவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து நடவடிக்கை கலெக்டர் அலுவலகத்தில் முறையிடுவதோடு, சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபடுவோம் என்றார்.
தலைஞாயிறு தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கமல்ராம் கூறுகையில், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 45 நாட்கள் ஆகியும், இதுவரை நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதிகளுக்கு முறையாக தண்ணீர் வந்து சேரவில்லை.
ரூ.35 ஆயிரம் இழப்பீடு
தலைஞாயிறு பகுதியில் பிரிஞ்சு மூலை, 3-ம் சேத்தி, வடுகூர் 1-ம் சேத்தி மற்றும் வேதாரண்யம் வட்டாரத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் இளம்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி விட்டது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
பாதிப்பு குறித்து வேளாண்மைத்துறை உரிய கணக்கெடுப்பு செய்து ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். குறுவை சாகுபடியை காப்பாற்றிட முறை வைக்காமல் 1 மாதத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றார்.