விதையின் ஈரப்பதத்தை அறிந்து விதைகளை சேமிக்கலாம் விவசாயிகளுக்கு அதிகாரி அறிவுரை
விதையின் ஈரப்பதத்தை அறிந்து விதைகளை சேமிக்கலாம் என்று விழுப்புரம் விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் சந்தோஷ்குமார் கூறியுள்ளார்.
விதைகளின் தரம் என்பது பயிர் விளைச்சல் மற்றும் பயிர் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. பயிர் உற்பத்தியில் ஏற்படும் அபாயங்களை குறைக்கிறது. பயிர் நடவு செய்வதற்கு முன் விதைகளின் தரம் எவ்வாறு உள்ளது என்பதை அறிந்துகொள்ளவும், தரமற்ற விதைகளை விதைப்பதால் ஏற்படும் நேரம், பண விரயங்களை தடுப்பதில் விதைப்பரிசோதனை முக்கிய பங்காற்றுகிறது.
விதைகளின் முளைப்புத்திறனை அறிந்துகொள்வதன் மூலம் தேவையான மற்றும் சரியான விதை அளவை நிர்ணயம் செய்து கூடுதல் செலவை குறைக்க உதவுகிறது. நோய் மற்றும் பூச்சி தாக்குதலற்ற விதைகளை கண்டறிந்து அதன் மூலம் பின்னாளில் ஏற்படும் நஷ்டங்களையும் கால விரயத்தையும் தவிர்க்க உதவுகிறது.
சேமிக்கலாம்
நல்ல தரமான விதைகளை அடுத்த பருவத்திற்கு நாம் சேமித்து பயன்படுத்த திட்டமிட்டால் சேமிப்பதற்கு முன், விதையின் ஈரப்பதத்தை கண்டறிந்து பூச்சிநோய் தாக்காத அளவிற்கும், நீண்ட நாள் விதை உயிருடன் இருக்கவும் உகந்த ஈரப்பதத்தில் சேமிக்கவும், விதைப்பரிசோதனை முக்கிய பங்காற்றுகிறது. எனவே ஈரப்பத அளவு: நெல் 13 சதவீதம், உளுந்து 9 சதவீதம், சிறுதானியங்கள், மக்காச்சோளம் 12 சதவீதம், எண்ணெய் வித்துக்கள் 9 சதவீதம், பருத்தி 10 சதவீதம் இருக்க வேண்டும்.
ஆகவே விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள், தங்களிடம் உள்ள விதைகளை பரிசோதனை செய்ய விதை மாதிரி ஒன்றுக்கு ரூ.80 ஆய்வுக்கட்டணமாக செலுத்தி விதையின் தரம் அறிந்து விதைக்கவும், அறுவடை செய்த விதையை அடுத்த விதைப்புக்கு சேமிக்கவும், விதையின் ஈரப்பதத்தை அறிய வேண்டும். அவ்வாறு அறிந்துகொண்டு விதைகள், பூச்சிநோய் தாக்குதலுக்கு உள்ளாகாமல் சேமிக்கலாம். மேற்கண்ட தகவல் விழுப்புரம் விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் சந்தோஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.