கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் காரை மறிக்க முயன்ற அக்காள்-தங்கை


கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் காரை மறிக்க முயன்ற அக்காள்-தங்கை
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் காரை அக்காள்-தங்கை மறிக்க முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

குறைதீர்க்கும் கூட்டம்


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக கலெக்டர் விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா ஆகியோர் 2 கார்களில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். நுழைவு வாயில் அருகே கார்கள் வந்த போது 2 பெண்கள் ஓடிவந்து கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் கார்களை மறிக்க முயன்றனர்.


இதைப்பார்த்த போலீசார் ஓடிச்சென்று 2 பெண்களையும் தடுத்தனர். இதற்கிடையே காரில் இருந்து இறங்கி வந்த கலெக்டர் விசாகன் அந்த பெண்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் பள்ளப்பட்டி அந்தோணியார் தெருவை சேர்ந்த நதியா (வயது 33), அவருடைய தங்கை சவுமியா (30). என்று தெரிவித்தனர். மேலும் நாங்கள் வசிக்கும் வீட்டை அபகரிக்க சிலர் முயற்சிக்கின்றனர். இதற்காக எங்களை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.


வீட்டை அபகரிக்க முயற்சி


வீட்டை அபகரிக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கடந்த மாதம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றோம். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அரசு வழங்கிய ஆவணங்கள் அனைத்தையும் திரும்ப ஒப்படைப்பதற்காகவே கலெக்டர் அலுவலகம் வந்தோம் என்று சகோதரிகள் தெரிவித்தனர்.


இதையடுத்து 2 பெண்களின் பிரச்சினை குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பேரில் 2 பெண்களையும் அழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வசிக்கும் வீடு அமைந்துள்ள இடத்துக்கு பட்டா உள்ளதா? எதற்காக அதனை மர்ம நபர்கள் அபகரிக்க முயல்கின்றனர்? என்று விசாரணை நடத்தினர். பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


265 மனுக்கள்


இதையடுத்து குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் கலெக்டரிடம் மனுக்களை கொடுத்தனர். அதன்படி ஆத்தூர் தாலுகா கீழக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நாங்கள் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கிராமத்தில் வசிக்கிறோம். எங்களுக்கு 1989-ம் ஆண்டு அரசு சார்பில் வழங்கப்பட்ட நிலத்தை அரசிடம் திரும்ப ஒப்படைக்கும்படி அதிகாரிகள் தற்போது கேட்கின்றனர். அந்த இடத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுப்போம் என்று தெரிவிக்கின்றனர். எங்களின் வாழ்வாதாரமே அந்த நிலத்தை நம்பி தான் இருக்கிறது. அதனை பறிக்க நினைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். நேற்று நடந்த கூட்டத்தில் மேற்கண்ட மனுக்கள் உள்பட மொத்தம் 265 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.



Next Story