ராணுவ வீரர் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம்


ராணுவ வீரர் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம்
x

மாரடைப்பால் மரணமடைந்த ராணுவ வீரர் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் அருகே உள்ள பாறையூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 45). பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் 29-ந் தேதி விடுமுறையில் கிருஷ்ணகிரியில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு லட்சுமணன் உயிரிழந்துவிட்டார். அதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து அவது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள பாறையூர் பகுதிக்கு உடல் கொண்டு வரப்பட்டு அவர்களது சொந்த நிலத்தில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. தேவராஜி, நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் மற்றும் வருவாய் துறையினர் ராணுவ வீரரின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

லட்சுமணனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.


Next Story