கிராம நிர்வாக அலுவலர் மகன் பலி
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கிராம நிர்வாக அலுவலரின் மகன் பலியானார்.
பழனியை அடுத்த பழைய ஆயக்குடியை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 50). அவருடைய மனைவி லீலாவதி (46). இவர்களுக்கு தமிழரசன் (25), குறளரசன் (23) என 2 மகன்கள் உள்ளனர். லீலாவதி, சிவகிரிபட்டி கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். ராஜலிங்கம் ஏற்கனவே இறந்து விட்டார். மூத்த மகன் தமிழரசன் விவசாயம் செய்து வருகிறார். இளைய மகன் குறளரசன் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். அகாடமியில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் தூத்துக்குடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் செம்பட்டி வழியாக பழைய ஆயக்குடிக்கு குறளரசன் வந்து கொண்டு இருந்தார். செம்பட்டி-பழனி சாலையில் ராமநாதபுரம் அருகே சாலைப் பணிகள் நடைபெற்றதால், வாகனங்களை ஒரு வழிப்பாதையில் திருப்பி அனுப்பினர்.
குறளரசன் மோட்டார் சைக்கிளில் ஒரு வழிப்பாதையில் சென்று கொண்டிருந்தார். எதிரே திருப்பூரில் இருந்து, மதுரை நோக்கி வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குறளரசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த, செம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குறளரசன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் சதீஷ்குமார் (44) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.