தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற மகன்
திருச்சி தென்னூரில் தந்தையை கொலை செய்துவிட்டு, மயங்கி விழுந்து இறந்ததாக நாடகமாடி இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி தென்னூரில் தந்தையை கொலை செய்துவிட்டு, மயங்கி விழுந்து இறந்ததாக நாடகமாடி இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
முறுக்கு வியாபாரி
திருச்சி தென்னூர் சின்னச்சாமி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 52). முறுக்கு வியாபரம் செய்து வந்தார். இவருடைய மனைவி சாந்தி (50). இவர்களுக்கு 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவருடைய மூத்த மகன் விஜயகுமார் (26) சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று காலை முருகனை காணவில்லை என்று கூறி விஜயகுமார் அக்கம், பக்கத்தில் தேடியுள்ளார். அப்போது, வீட்டின் அருகில் உள்ள உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் முருகன் இறந்து கிடந்தார். உடனே தனது தந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்து வந்த அவர், இறுதிச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்தார்.
சாவில் மர்மம்
உறவினர்களுக்கும் தனது தந்தை மயங்கி விழுந்து இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தார். முருகனின் உடலை குளிர்பதன பெட்டியில் வைத்து மாலை அணிவித்து, அனைவரும் அழுதுகொண்டிருந்தனர். ஆனால் முருகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அக்கம்பக்கத்தினர் தில்லைநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார், திடீரென வந்ததை பார்த்ததும் துக்கவீட்டில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு, குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த முருகனின் உடலை போலீசார் ஆய்வு செய்தனர்.
நாடகமாடிய மகன்
அப்போது, அவருடைய உடலில் காயங்கள் இருந்தன. இதுபற்றி, விஜயகுமாரிடமும், வீட்டில் இருந்தவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
மதுபோதைக்கு அடிமையான முருகன் தினந்தோறும் குடித்துவிட்டு குடும்பத்தில் உள்ளவர்களை தகாத வார்த்தைகளால் பேசுவதுடன், அவர்களை அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார். அதுபோல், நேற்று முன்தினம் இரவும் முருகன் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்துள்ளார்.
குத்திக்கொலை
இதை விஜயகுமார் கண்டித்தபோது, அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த விஜயகுமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது தந்தையின் வயிற்றில் 2 இடங்களில் குத்தியதாக தெரிகிறது.
இதில் கீழே விழுந்ததில் முருகனுடைய தலையில் அடிபட்டு மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த விஜயகுமார், தந்தையின் உடலை அருகில் உள்ள உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.
கைது
பின்னர் நேற்று காலையில் தந்தையை தேடுவது போல் நாடகமாடிய அவர், ஆற்றின் அருகே முருகன் மயங்கி விழுந்து இறந்துவிட்டதாக கூறி, அவருடைய உடலை மீண்டும் எடுத்து வந்து, வீட்டில் இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் முருகனின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் விஜயகுமார் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், விஜயகுமாரை கைது செய்தனர். தந்தையை கொலை செய்துவிட்டு மகனே நாடகமாடிய சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.