உளுந்தூா்பேட்டை அருகே தந்தை என நினைத்து முதியவரின் உடலை அடக்கம் செய்ய முயன்ற மகன்கள் மாயமானவர் திரும்பி வந்ததால் அதிர்ச்சி


உளுந்தூா்பேட்டை அருகே தந்தை என நினைத்து முதியவரின் உடலை அடக்கம் செய்ய முயன்ற மகன்கள் மாயமானவர் திரும்பி வந்ததால் அதிர்ச்சி
x
தினத்தந்தி 30 March 2023 12:15 AM IST (Updated: 30 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூா்பேட்டை அருகே தந்தை என நினைத்து முதியவரின் உடலை அடக்கம் செய்ய முயன்ற மகன்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெடுமானூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 65), கூலி தொழிலாளி. இவருக்கு கவுண்டமணி(30), செந்தில்(28) என 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்பிரமணிக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சுப்பிரமணி கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் சுப்பிரமணி பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை.

அழுகிய நிலையில் பிணம்

இதற்கிடையே தியாகதுருகம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் முதியவர் பிணம் ஒன்று சற்று அழுகிய நிலையில் கிடந்ததை ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பார்த்தனர். பின்னர் இதுபற்றி தியாகதுருகம் வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வனத்துறையினர் மற்றும் போலீசார் பிணமாக கிடந்த முதியவர் உடலை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அடையாளம் காண முயற்சி செய்தனர்.

ஒரே மாதிரி உடல் அமைப்பு

காணாமல் போன சுப்பிரமணியின் உருவமும் உயிரிழந்து கிடந்த முதியவரின் உடல் அமைப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்ததால் இறந்தவர் தனது தந்தை தான் என கவுண்டமணியும், செந்திலும் முடிவு செய்தனர். மேலும் தாய், சகோதரி மற்றும் உறவினர்களுக்கு தங்களது தந்தை இறந்துவிட்டதாக அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் கவுண்டமணியும், செந்திலும் தியாகதுருகம் காட்டுப்பகுதியில் இருந்து இறந்தவரின் உடலை ஒரு மோட்டாா் சைக்கிளில் எடுத்துக்கொண்டு நெடுமானூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டுக்கு எடுத்து வந்தனர்.

மேலும் சுப்பிரமணி மனைவி, மகள் உறவினர்களும் சுடுகாட்டுக்கு வந்தனர்.

திரும்பி வந்த தந்தை

இதற்கிடையே உறவினர் ஒருவர் சுப்பிரமணியன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மாலை வாங்க எலவனாசூர்கோட்டைக்கு சென்றார். அப்போது கடைவீதியில் சுப்பிரமணி நடந்து வந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர், நீங்கள் இறந்து விட்டதாக கூறி உனது மகன்கள் அங்கே ஒரு உடலை வைத்துக் கொண்டு இறுதி சடங்கு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.

இதைக்கேட்டு திடுக்கிட்ட சுப்பிரமணி பதறியடித்துக்கொண்டு நெடுமானூா் சுடுகாட்டுக்கு சென்றுள்ளார். சுப்பிரமணி வருவதை பார்த்த மகன்கள் கவுண்டமணி, செந்தில் மற்றும் உறவினர்கள் அதிா்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து சுப்பிரமணி தான் இறக்கவில்லை என்றும், இவ்வளவு நாட்களாக எலவனாசூர்கோட்டையில் உள்ள கோவிலில் தங்கியிருந்ததாகவும் கூறினார். இதைகேட்ட பிறகே உறவினர்கள் நிம்மதி அடைந்தனர்.

பரபரப்பு

உடனே அவர்கள் தியாகதுருகம் போலீசாரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறினர். பின்னர் தியாகதுருகம் போலீசார் விரைந்து வந்து முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தை இறந்துவிட்டதாக நினைத்து அடையாளம் தெரியாதவரின் உடலை அடக்கம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story