கோவிலுக்குள் புகுந்து ஊழியர் சரமாரி வெட்டிக் கொலை


கோவிலுக்குள் புகுந்து ஊழியர் சரமாரி வெட்டிக் கொலை
x

நெல்லை அருகே கோவிலுக்குள் புகுந்து ஊழியர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய 7 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

நெல்லை அருகே கோவிலுக்குள் புகுந்து ஊழியர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய 7 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவில் ஊழியர்

நெல்லை அருகே உள்ள மேலச்செவல் பழைய கிராமம் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்ற கிட்டுசாமி (வயது 55). இவர் அப்பகுதியில் உள்ள இந்து சமய அறநிலைய துறைக்கு பாத்தியப்பட்ட நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு ஆவுடையம்மாள் (50) என்ற மனைவியும், நவநீதன் (25), முப்பிடாதி (18) ஆகிய மகன்களும் உள்ளனர்.

வெட்டிக் கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் பொங்கல் அன்று மதியம் கோவிலில் கிருஷ்ணன் இருந்தார். அப்போது, அங்கு மர்ம கும்பல் புகுந்தது. திடீரென்று அந்த கும்பல், அரிவாளால் கிருஷ்ணனை சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் அங்கிருந்து மர்ம கும்பல் தப்பிச் சென்றுவிட்டது.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய கிருஷ்ணனை மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

முன்விரோதம்

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கூடுதல் சூப்பிரண்டு மாரிராஜன், சேரன்மாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்கள்.

விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கோவில் சுற்றுச்சுவரில் அமர்ந்து மது அருந்தி பொதுமக்களை அவதூறாக பேசி வந்தனர். இதை கிருஷ்ணன் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்தது.

7 வாலிபர்கள் கைது

இந்த கொலை தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் தொடர்புடைய மேலச்செவலைச் சேர்ந்த கொம்பையா (19), பாலசந்துரு (23), அருண் இசக்கி பாண்டி (19), செல்லக்குட்டி என்ற துரை (23), மாரியப்பன் (19), பத்மநாபன் (19), அய்யப்பன் (23) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அந்த பகுதியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

நெல்லை அருகே கோவிலுக்குள் புகுந்து ஊழியர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story