மாணவர் சேர்க்கைக்கான மாநில அளவிலான தேர்வு போட்டிகள்-3-ந் தேதி சென்னையில் நடக்கிறது


மாணவர் சேர்க்கைக்கான மாநில அளவிலான தேர்வு போட்டிகள்-3-ந் தேதி சென்னையில் நடக்கிறது
x

சிறப்பு விளையாட்டு விடுதிக்கான சேர்க்கை மாநில அளவிலான தேர்வு போட்டிகள் வருகிற 3-ந் தேதி சென்னையில் நடப்பதாக, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

சிறப்பு விளையாட்டு விடுதிக்கான சேர்க்கை மாநில அளவிலான தேர்வு போட்டிகள் வருகிற 3-ந் தேதி சென்னையில் நடப்பதாக, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விளையாட்டு விடுதிக்கான சேர்க்கை

திருவண்ணாமலை மாவட்டம் 2023-24ம் ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சிறப்பு விளையாட்டு விடுதிக்கான சேர்க்கை மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) அன்று காலை 7 மணியளவில் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கம் மற்றும் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி விளையாட்டு அரங்கம் ஆகிய இடங்களில் நடக்க உள்ளது.

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் மாணவர்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி (தடகளம், கூடைபந்து, குத்துச்சண்டை, கையுந்து பந்து, பளு தூக்குதல், வாள்வீச்சு), தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மாணவர்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி (ஆக்கி), சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம் மாணவிகளுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி (தடகளம், குத்துச்சண்டை, கையுந்துபந்து, கால்பந்து, பளுதூக்குதல், ஜூடோ), வேலூர் மாவட்டம் காட்பாடி மாணவிகளுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி (கூடைபந்து, கைப்பந்து, ஆக்கி, கபடி) ஆகிய விளையாட்டு விடுதியில் சேர மாணவ, மாணவிகள் தேர்வு செய்யலாம். இதில் 1.1.2023 அன்று 17 வயது நிரம்பிய 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் மாணவ, மாணவிகள் தகுதியுடையவர் ஆவர்.

வருகிற 1-ந் தேதி கடைசி

தனி நபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில அளவில் குடியரசு, பாரதியார் தின விளையாட்டு போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். கையுந்து விளையாட்டில் 185 சென்டி மீட்டருக்கு மேல் உயரமுள்ள மாணவர்கள் மற்றும் 175 சென்டி மீட்டருக்கு மேல் உயரமுள்ள மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் சிறப்பு விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தினை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் விண்ணப்பத்தினை வருகிற 1-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் மற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை 04175-233169 அல்லது 7401703484 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story