உருமி இசைத்து கோவில் மாடுகளுக்கு அழைப்பு விடுக்கும் வினோதம்
மாட்டுப்பொங்கலில் பங்கேற்க உருமி இசைத்து, கோவில் மாடுகளுக்கு அழைப்பு விடுக்கும் வினோத நிகழ்ச்சி, கம்பம் நந்தகோபாலன் கோவிலில் நடந்தது.
கோவில் மாடுகளுக்கு அழைப்பு
கம்பத்தில் பிரசித்தி பெற்ற நந்தகோபாலன் கோவிலில், நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத்தொழு உள்ளது. இங்கு மாட்டுப்பொங்கல் நாளில், பட்டத்துக்காளைக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
மேலும் அன்றைய தினம் மேற்குத்தொடர்ச்சி மலை, சுருளி மலைப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற கோவில் மாடுகள் கோவில் வளாகத்துக்கு வந்துவிடும். இந்த கோவில் மாடுகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், தை மாதம் பிறப்பதற்கு 9 நாட்களுக்கு முன்பு பந்தல்கால் நடப்பட்டு 2 பேர் உருமி இசைப்பார்கள்.
அந்த உருமி இசையை கூர்ந்து கவனித்தால் 'இந்து நாளைய தையப்பா' 'இந்து நாளைய தையப்பா' (இன்றும், நாளையும் தை பொங்கல்) என்று கானம் ஒலிக்கும்.
உருமி இசைத்து...
உருமி இசையை கேட்டு மேற்கு தொடர்ச்சிமலை, சுருளிமலை காட்டில் மேய்ச்சலில் உள்ள நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத்தொழு மாடுகள் கோவிலுக்கு வந்து சேரும் என்பது ஐதீகம்.
மாட்டுப்பொங்கல் முடிந்ததும் மீண்டும் மாடுகள் மேய்ச்சலுக்கு சென்று விடும். கோவில் மாடுகளுக்கு, தை பிறக்கப்போகுது, நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத்தொழுவுக்கு வாருங்கள் என உருமி இசைத்து அழைப்பு விடுக்கும் வினோத நிகழ்ச்சி நடந்தது.
காலையில் பிரம்ம முகூர்த்தத்திலும், மாலை அந்தி சாயும் நேரத்திலும் உருமி இசைக்கப்படுவதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.