'பரியேறும் பெருமாள்' படத்தில் நடித்த தெருக்கூத்து கலைஞர் மரணம்
‘பரியேறும் பெருமாள்’ படத்தில் நடித்த நெல்லையை சேர்ந்த தெருக்கூத்து கலைஞர் தங்கராஜ் மரணம் அடைந்தார்.
'பரியேறும் பெருமாள்' படத்தில் நடித்த நெல்லையை சேர்ந்த தெருக்கூத்து கலைஞர் தங்கராஜ் மரணம் அடைந்தார்.
தெருக்கூத்து கலைஞர்
நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோநகரை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 54). தெருக்கூத்து கலைஞரான இவர் கிராமிய கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
இவர் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகன் கதிருக்கு தந்தையாக நடித்து இருந்தார். மேலும் நடிகர் தனுஷின் கர்ணன் படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
மரணம்
இந்த நிலையில் தங்கராஜூக்கு நேற்று முன்தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று அதிகாலையில் இறந்தார்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக இளங்கோநகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு இயக்குனர் மாரி செல்வராஜ் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அரசு உதவ வேண்டும்
பின்னர் அவர் கூறும்போது, 'தங்கராஜ் பரியேறும் பெருமாள் படத்தின் மூலமாக அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். அவரை போல் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நிறைய கலைஞர்கள் நலிந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார்.
தெருக்கூத்து கலைஞர் தங்கராஜின் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்து வந்தது. கடந்த 2021-ம் ஆண்டு கனமழை காரணமாக அவரது வீடு இடிந்து விழுந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அப்போதைய கலெக்டர் விஷ்ணு முயற்சியால் இளங்கோநகரில் அவருக்கு புதிய வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.