இலவச டி.வி., மிக்சியை திரும்ப கொடுக்கும் போராட்டம்
இந்து மக்கள் கட்சி சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து இலவச பொருட்களை திரும்ப ஒப்படைக்கும் போராட்டம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இந்து மக்கள் கட்சி சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து இலவச பொருட்களை திரும்ப ஒப்படைக்கும் போராட்டம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதற்கு இளைஞர் அணி மாநில துணை தலைவர் மோகன்குமார் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் தர்மா முன்னிலை வகித்தார். இதில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன்சம்பத் கலந்து கொண்டு, மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும், இலவசங்கள் வேண்டாம் என்றும் வலியுறுத்தி பேசினார். இந்த போராட்டத்தின் போது தமிழக அரசு வழங்கிய இலவச டி.வி. மற்றும் மிக்சியை தலையில் சுமந்தபடி மின்கட்டண உயர்வை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் கோஷமிட்டனர்.
இதையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க சென்றனர். அப்போது இலவச டி.வி. மற்றும் மிக்சியை கலெக்டர் அலுவலகத்துக்குள் எடுத்து செல்ல இந்து மக்கள் கட்சியினர் முயன்றனர். ஆனால் அவற்றை எடுத்து செல்ல போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை மனுவை மட்டும் கொடுத்தனர்.