திருக்கோவிலூரில் 10-ம் வகுப்பு மாணவன் தென்பெண்ணையாற்றில் மூழ்கி பலி தந்தையுடன் குளித்துக் கொண்டிருந்தபோது பரிதாபம்
திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றில் தந்தையுடன் குளித்துக் கொண்டிருந்த 10-ம் வகுப்பு மாணவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
திருக்கோவிலூர்,
ஆற்றில் மூழ்கி...
திருக்கோவிலூர் அருகே உள்ள டி.தேவனூர் கிராமத்தை சேர்ந்தவர் மூக்கையன். விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் 10-ம் வகுப்பு படிக்கும் தனது மகன் புவனேஷனுடன் (வயது 15) நேற்று முன்தினம் திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் உள்ள தரைப்பாலம் அருகே குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் புவனேஷன் ஆற்றில் மூழ்கி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். தனது கண்ணெதிரே மகன் ஆற்று தண்ணீரில் அடித்து செல்லப்படுவதை கண்டு மூக்கையன் கதறியதோடு, அவனை காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டார். இதைகேட்ட அக்கம் பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மாணவனை தேடினர். ஆனால் அவன் கிடைக்கவில்லை.
உறவினர்கள் சாலை மறியல்
இதனிடையே இதுபற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆற்றில் இறங்கி மாணவனை தேடினர். இருப்பினும் மாணவனை கண்டுபிடிக்கமுடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த புவனேஷனின் உறவினர்கள் மற்றும் டி.தேவனூர் கிராம மக்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவனை மீட்கக்கோரி திருக்கோவிலூர்- விழுப்புரம் சாலையில் அரகண்டநல்லூர் தரைப்பாலம் அருகே திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் தாசில்தார் ஆதிசக்தி சிவகுமரிமன்னன் மற்றும் அரகண்டநல்லூர் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதனப்படுத்தியதுடன் மாணவனை மீட்கும் பணியை தீவிரப்படுத்தபடும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.
பிணமாக மீட்பு
இதற்கிடையே தீயணைப்பு வீரர்கள் ஆவியூர் சுடுகாடு எதிரே தென்பெண்ணை ஆற்றில் புவனேஷனை பிணமாக மீட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தந்தை கண்ணெதிரே மகன் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.