கன்னிவாடி அருகே பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி மாணவன் பலி
கன்னிவாடி அருகே பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி மாணவன் பலியானார்.
கன்னிவாடி அருகே உள்ள டி.பண்ணைப்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் அருள்பாண்டியன். அவருடைய மகன் முத்துப்பாண்டி (வயது 6). இவன், அங்குள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்த வந்தான். நேற்று இவன், அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மணிகண்டன், கிருத்திக் ஆகியோருடன், அப்பகுதியில் விற்பனைக்காக வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டிருந்த இடத்துக்கு சென்றார். அங்கு மழைநீர் தேங்கும் வகையில் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. அந்த பள்ளத்தில் தற்போது பெய்த மழையினால் தண்ணீர் தேங்கி நின்றது.
சிறுவர்கள் 3 பேரும் பள்ளத்தின் அருகே சென்றனர். அப்போது திடீரென முத்துப்பாண்டி பள்ளத்தில் தவறி விழுந்தான். அவனை மீட்க 2 சிறுவர்களும் முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. சிறிதுநேரத்தில் முத்துப்பாண்டி தண்ணீரில் மூழ்கினான். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள் 2 பேரும், ஊருக்கு சென்று அவனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து முத்துப்பாண்டியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அங்கு ஓடி வந்தனர். பின்னர் தண்ணீரில் மூழ்கிய முத்துப்பாண்டியை மீட்டு சிகிச்சைக்காக கன்னிவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து கன்னிவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.