கடலில் மூழ்கி மாணவன் பலி
கடலூரில் கடலில் மூழ்கி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
கடலூர்,
கடலூர் மஞ்சக்குப்பம் அருந்ததி நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் மதன் (வயது 13). இவன் சின்னகங்கணாங்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் சந்துருவின் பிறந்த நாளை கொண்டாட, மதன் உள்ளிட்ட 8 பேர் தாழங்குடா கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு மதன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடலில் குளித்துக் கொண்டிருந்தான். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் மதன், கோபிநாத் (18) ஆகியோர் சிக்கி, கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதை பார்த்த நண்பர்கள் கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு வந்த மீனவர்கள், கடலில் தத்தளித்த கோபிநாத்தை மீட்டனர். ஆனால் மதனை அவர்களால் மீட்க முடியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விரைந்து வந்து மீனவர்கள் உதவியுடன் பைபர் படகில் கடலுக்குள் சென்று மதனை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு மதனை, பிணமாக மீட்டனர். தொடர்ந்து அவனது உடலை தேவனாம்பட்டினம் போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பரின் பிறந்த நாளை கொண்டாட சென்ற மாணவன், கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.