தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றபோது சுழலில் சிக்கிய பள்ளி மாணவனை தேடும் பணி தீவிரம்


தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றபோது  சுழலில் சிக்கிய பள்ளி மாணவனை தேடும் பணி தீவிரம்
x

கம்பைநல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றபோது சுழலில் சிக்கிய பள்ளி மாணவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.

தர்மபுரி

மொரப்பூர்:

கம்பைநல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றபோது சுழலில் சிக்கிய பள்ளி மாணவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.

பள்ளி மாணவன்

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் மணி என்கிற தினேஷ் (வயது 15). இவன் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாணவன் இதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் 3 பேருடன் அங்குள்ள தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றான்.

நண்பர்கள் 4 பேரும் தென்பெண்ணை ஆற்றின் மேம்பாலத்திற்கு அடியில் குளிக்க இறங்கினர். அப்போது மாணவன் தினேஷ் சுழலில் சிக்கி கொண்டான். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மாணவனை மீட்க முயன்றும் முடியவில்லை.

தேடும் பணி

இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசுக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் அரூர் தீயணைப்புத்துறை படையினர் விரைந்து வந்து தென்பெண்ணை ஆற்றில் சுழலில் சிக்கிய மாணவனை தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து தீயணைப்பு படையினர் மாணவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் மாணவனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் சோகத்துடன் காத்திருந்தனர். இதனால் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story