கெங்கவல்லி அருகே கல்லூரி மாணவி படுகொலை: மலைப்பகுதியில் பதுங்கிய மாணவரை பிடித்து கிராம மக்கள் போலீசில் ஒப்படைத்தனர் காதலித்து ஏமாற்றியதாக பரபரப்பு வாக்குமூலம்


கெங்கவல்லி அருகே கல்லூரி மாணவி படுகொலை:  மலைப்பகுதியில் பதுங்கிய மாணவரை பிடித்து கிராம மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்  காதலித்து ஏமாற்றியதாக பரபரப்பு வாக்குமூலம்
x

கெங்கவல்லி அருகே கல்லூரி மாணவியை படுகொலை செய்த மாணவர் மலைப்பகுதியில் பதுங்கி இருந்தார். அவரை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். காதலித்து ஏமாற்றியதால் அவரை கொன்றதாக போலீசில் மாணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சேலம்

கெங்கவல்லி

கல்லூரி மாணவி கொலை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சி மேலவீதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய 2-வது மகள் ரோஜா (வயது 19). இவர், ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவரை, ஆத்தூர் தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த ராமர் மகன் சாமிதுரை என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், காதலை ஏற்க மறுத்ததால் தலையில் கல்லை போட்டு ரோஜாவை கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த கொலை தொடர்பாக ரோஜாவின் அக்காள் நந்தினி கெங்கவல்லி போலீசில் புகார் செய்தார். அவருக்கு வருகிற 13-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது. திருமண ஏற்பாடுகளை பெற்றோர் செய்து வந்த நிலையில் ரோஜா கொலை செய்யப்பட்டது அந்த குடும்பத்தையே நிலைகுலைய செய்தது.

கொலையாளியை பிடிக்க தீவிரம்

கெங்கவல்லி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலையில், சென்னை தனியார் கல்லூரி மாணவரான சாமிதுரையை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களிலும் வலைவீசி அவரை தேடி வந்தனர்.

இதற்கிடையே கொலையாளியின் புகைப்படத்தை பொதுமக்களிடம் காண்பித்து, இவரை எங்காவது கண்டால் எங்களுக்கு தகவல் தெரிவியுங்கள் என்று போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். தொடர்ந்து சாமிதுரையை பிடிக்க போலீசார் கடந்த 3 நாட்களாக இரவு, பகலாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் பிடித்தனர்

இந்த நிலையில், நேற்று காலை மலைப்பகுதியில் பதுங்கி இருந்த சாமிதுரை லுங்கி அணிந்தபடி கையில் இரும்பு கம்பியுடன் அங்குள்ள ஒரு தொட்டியில் தண்ணீர் குடித்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த ஒரு பெண், அந்த பகுதி மக்களுக்கு தகவல் தெரிவித்தார். சாமிதுரை இருக்கும் தகவல் கிடைத்தவுடன் அந்த பகுதி மக்கள் ஆத்திரத்துடன் கம்புகளுடன் திரண்டனர்.

பொதுமக்களை கண்ட சாமிதுரை, அவர்களிடம் இருந்து தப்பிக்க தான் வைத்திருந்த கம்பியை கொண்டு சிலரை தாக்கியதாக தெரிகிறது. இதில் சிலர் காயம் அடைந்தனர். அங்கிருந்து தப்பி ஓடிய அவர் அங்குள்ள சோள தோட்டத்துக்குள் புகுந்தார். அப்படி இருந்தும் கிராம மக்கள் திரண்டு சுற்றி வளைத்து அவரை பிடித்தனர். அதற்குள் தகவல் அறிந்து போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். இதையடுத்து சாமிதுரையை போலீசாரிடம், பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்

இதைத்தொடர்ந்து போலீசார், சாமிதுரையை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். முதலில் மவுனமாக இருந்த சாமிதுரை, போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் ரோஜாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதுடன், அதற்கான காரணம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

நான் ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் பகுதியில் வசித்து வருகிறேன். சிறு வயதிலேயே தாயை இழந்து விட்டேன். அதனால் மிகவும் வேதனை அடைந்தேன். 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை எங்கள் ஊரில் படித்தேன். பின்னர் உறவினர்கள் வீட்டில் தங்கி சென்னையில் படித்தேன். அப்போது கூடமலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வேன். அப்படி வந்த போது ரோஜாவுடன் பழக்கம் ஏற்பட்டது. நானும், ரோஜாவும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தோம். கடந்த சில மாதங்களாக அவள், என்னை விட்டு ஒதுங்கி சென்றாள்.

உதாசீனப்படுத்தினாள்

ரோஜாவிடம் பேசாமல் என்னால் இருக்க முடியவில்லை. அவளை சந்தித்து எதற்காக என்னை விட்டு விலகி செல்கிறாய்? என்று கேட்டேன். அதற்கு அவள் சரிவர பதில் சொல்லவில்லை. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கல்லூரிக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் ரோஜா நின்று கொண்டிருந்தாள். அவளை சந்தித்து பேச முயன்றேன். அவள் என்னை உதாசீனப்படுத்தி விட்டு கல்லூரி பஸ்சில் ஏறினாள். இதில் ஆத்திரம் அடைந்த நான், ரோஜாவை அடித்து விட்டேன்.

இதனை அறிந்த அவளுடைய தந்தை மற்றும் உறவினர்கள் என்னை தரக்குறைவாக பேசினர். என்னுடைய உறவினர்களிடம் தகராறு செய்தனர். இதனால் என்னுடைய உறவினர்கள் என்னை தாக்கியதுடன், கேவலமாக பேசினர். இதனால் நான் மிகவும் மனம் உடைந்தேன். கூடமலையில் இருக்க விருப்பம் இல்லாமல் சென்னைக்கு சென்று விட்டேன். அங்கு சென்றாலும் என்னுடைய நினைவு எல்லாம் ரோஜாவை பற்றியதாகவே இருந்தது.

சேர்ந்து சாக வேண்டும்

யார் முன்னால் கேவலப்பட்டேனோ, அவர்கள் முன்னால் நானும் ரோஜாவும் சேர்ந்து வாழ வேண்டும். இல்லை என்றால் இருவரும் ஒன்றாக சாக வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்காக சென்னையில் இருந்து ஆத்தூர் வந்தேன். அங்கு 5 லிட்டர் கேன் வாங்கிக்கொண்டு அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு சென்று டீசல் வாங்கினேன்.

மேலும் தனியாக ஒரு லிட்டர் காலி பாட்டிலில் டீசல் பிடித்து கொண்டு கடம்பூருக்கு பஸ்சில் சென்றேன். அன்று மாலை அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டேன். அந்த வழியாக வந்தவர்களிடம் லிப்ட் கேட்டு மோட்டார் சைக்கிளில் ரோஜா வீட்டிற்கு அருகே வந்து இறங்கினேன். அதன்பின்னர் மலை அடிவாரத்திற்கு சென்று டீசர்ட் மற்றும் அணிந்திருந்த லுங்கியை கழட்டி ஒரு புதருக்குள் மறைத்து வைத்தேன். பின்னர் நான் ஒரு பையில் வைத்திருந்த பேண்ட், சட்டையை அணிந்து கொண்டேன்.

வாக்குவாதம்

அன்று இரவு முழுவதும் அங்கேயே இருந்தேன். மறுநாள் செவ்வாய்க்கிழமை மாலை நான் ேராஜா வீட்டுக்கு சென்று யாெரல்லாம் இருக்கிறார்கள் என்று அந்த பகுதியில் பதுங்கி இருந்து நோட்டமிட்டேன். மாலை 6 மணி அளவில் ரோஜாவுக்கு சொந்தமான விவசாய தோட்டத்திற்கு சென்றேன். அங்கு ரோஜா செல்போனில் பேசிக்கொண்டிருந்தாள்.

அவளை நேருக்கு நேர் சந்தித்தேன். என்னை கண்டதும் ரோஜா திடுக்கிட்டு இங்கு எதற்காக வந்தாய் என்று திட்டினாள். நீ யாரிடம் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று எனக்கு தெரியும் என்றேன். அதற்கு அவள், நான் யாரிடம் பேசினால் உனக்கு என்ன? என்று கூறி என்னிடம் வாக்குவாதம் செய்தாள்.

கல்லால் தாக்கி கொன்றேன்

வாக்குவாதம் முற்றியதும் நான் ஆத்திரம் அடைந்து, ஒரு கேனில் இருந்த டீசலை ரோஜா மீது ஊற்றினேன். இன்னொரு கேனில் இருந்த டீசலை என் மீது ஊற்றினேன். கையில் இருந்த லைட்டரை பற்ற வைத்த போது அது சரியாக பற்றவில்லை. அவள் என்னை தள்ளி விட்டு விட்டு ஓட முயன்றாள். அவளை நான் தள்ளினேன். இதில் அவள் கீழே விழுந்தாள். அங்கு கிடந்த கல்லை எடுத்து ரோஜாவின் பின் தலையில் அடித்தேன்.

ரோஜாவின் அலறல் சத்தம் கேட்டு அவளுடைய அக்காள் நந்தினி அங்கு ஓடி வந்தாள். என் தங்கையை ஒன்றும் செய்து விடாதே என்று கத்தினாள். அவளது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவது போல் தெரிந்தது. உடனே நான் அங்கிருந்து தப்பி ஓடி மலைப்பகுதியில் பதுங்கிக் கொண்டேன்.

தண்ணீர் குடிக்க வந்த போது சிக்கினேன்

கடந்த 3 நாட்களாக மாம்பழங்களை சாப்பிட்டு பசியை போக்கினேன். போலீசார் என்னை பிடித்து விடுவார்களோ என்ற பயத்துடனே இருந்தேன். மலைப்பகுதியில் தண்ணீர் கிடைக்கவில்லை. அதனால் தண்ணீர் குடிக்க வந்த போது கிராம மக்களிடம் சிக்கிக்கொண்டேன். அவர்கள் என்னை பிடித்து போலீசில் ஒப்படைத்து விட்டனர்.

இவ்வாறு வாக்குமூலத்தில் சாமிதுரை கூறியுள்ளார்.


Next Story