ஆசிரியர்கள் பாடம் நடத்தாததை கண்டித்து மாணவ-மாணவிகள் சாலை மறியல்


ஆசிரியர்கள் பாடம் நடத்தாததை கண்டித்து மாணவ-மாணவிகள் சாலை மறியல்
x

அணைக்கட்டு அருகே ஆசிரியர்கள் பாடம் நடத்தாததை கண்டித்து மாணவ- மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வகுப்பு நேரத்தில் செல்போனில் ஆசிரியர்கள் படம் பார்ப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

வேலூர்

வகுப்பு நேரத்தில் படம் பார்க்கின்றனர்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த மூலைகேட் பகுதியில் அரசினர் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 205 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 9 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இந்த நிலையில் ஆசிரியர்கள் சரியான முறையில் பாடம் நடத்தாமல், பாடம் நடத்த வேண்டிய நேரங்களில் தனது செல்போனில் படம் பார்த்துக் கொண்டும், மற்ற வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும், மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் கூறிவந்துள்ளனர்.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சதீஷ்குமாரிடம் தெரிவித்துள்ளனர். அவர் இது குறித்து மாவட்ட கல்விஅலுவலர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று மாணவ- மாணவிகள் வழக்கம்போல பள்ளிக்கு வந்தனர்.

சாலை மறியல்

வகுப்பு ஆரம்பித்த பிறகும் ஆசிரியர்கள் ஒருவர் கூட வகுப்பறைக்கு வந்து பாடம் நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அனைத்து மாணவ- மாணவிகளும் வேலூரில் இருந்து ஒடுகத்தூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சதீஷ்குமார், கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், கவுன்சிலர் மகாலிங்கம், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணன் மேனன் உள்ளிட்டோர் சென்று மறியலில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளிடத்தில் பேச்சு வார்த்தை நடத்தினர். பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசாரும் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பள்ளி மாணவ- மாணவிகள் கூறுகையில் ஆசிரியர்கள் குறித்த நேரத்திற்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் வகுப்பறைவில் பாடம் கற்பிக்கும் போது ஆசிரியர்கள் செருப்பு காலால் எங்களை உதைக்கிறார்கள். பென்சிலால் முதுகில் குத்துகிறார்கள். இதுகுறித்து தலைமை ஆசிரியர் ராஜேந்திரனிடம் எடுத்துக் கூறியும் நடவடிக்கை எடுக்காமல், செல்போனிலேயே அவர் கவனத்தை செலுத்தி வருகின்றார். இதனால் நாங்கள் மறியலில் ஈடுபட்டோம் என்று கூறினர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட கல்வி அலுவலர் அங்கு லட்சுமி உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, மாணவ- மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வகுப்பறைக்கு அழைத்துச் சென்றார். இதனையடுத்து ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். சரியான நேரத்திற்கு வகுப்பறைக்கு வந்து பாடங்கள் கற்பிக்க வேண்டும். இதனை தலைமை ஆசிரியர் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார். வரும் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு படிக்கும் 38 மாணவ- மாணவிகளையும் தேர்ச்சி பெற வைக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story