அரசு பள்ளியில் கல்வி அதிகாரியை முற்றுகையிட்டு மாணவிகள் போராட்டம்
ஓசூர்:-
ஓசூரில் அரசு பள்ளியில் கல்வி அதிகாரியை முற்றுகையிட்டு மாணவிகள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் சமரசம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அரசு பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜ் காலனியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 2,300 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தன்னார்வல கைப்பந்து பயிற்சியாளர் ஒருவர், பள்ளிக்கு வந்து மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளார். அவரை பள்ளிக்கு வரக்கூடாது என்று நிர்வாகம் நிறுத்தி விட்டது.
இதற்கிடையே பள்ளியில் நடந்த விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேசுவரி வந்தார். அவரது வாகனத்தை முற்றுகையிட்டு 25-க்கும் மேற்பட்ட மாணவிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, தன்னார்வல பயிற்சியாளரை நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
போலீசார் சமரசம்
தகவல் அறிந்து அங்கு வந்த ஓசூர் டவுன் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கலெக்டரிடம் புகார் அளிக்க போவதாக கூறி அந்த மாணவிகள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் பள்ளி வளாகத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் மகேசுவரி கூறுகையில், ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனிநபர் வந்து கைப்பந்து பயிற்சி அளித்துள்ளார். அவருக்கு கல்வித்துறை எந்தவித அனுமதியும் வழங்கவில்லை. இதற்கிடையே அவர் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. எனவே அவரை பள்ளிக்கு வரக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளோம். அவர், பள்ளியில் ஒரு அறையை வசப்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.