பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் படிக்க முடியாமல் அவதி
வலங்கைமான் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் படிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வலங்கைமான்:
வலங்கைமான் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் படிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர் மின்வெட்டு
வலங்கைமான் பகுதியில் கடந்த சில நாட்களாக, இரவு மற்றும் பகல் நேரங்களில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. தற்போது பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது.
ஏப்ரல் மாதம் முதல் 10-ம் வகுப்பு பொது தேர்வும் தொடங்க உள்ள நிலையில், தொடர் மின்வெட்டால் மாணவ,மாணவிகள் படிக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள், கணினி மையங்களில் வேலை பாதிக்கப்படுகிறது.
சீரான மின்சாரம்
அதேபோன்று வங்கிகளும் மின்வெட்டால் அவ்வப்போது முடங்கி வருகிறது. தொடர்ந்து பொதுமக்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாதன பொருட்களையும் இயக்க முடியவில்லை. கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் கிராம பகுதியில் உள்ள குடிநீர்தொட்டியில் மோட்டார்கள் இயங்குவதிலும் சிரமம் ஏற்படுகிறது.
மேலும் இந்த மின்வெட்டால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். கோடைகாலம் தொடங்கியுள்ளதாலும், மாணவ-மாணவிகள் நலன்கருதியும் சீரான மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.