ராகுல் காந்தியின் நடைபயணத்தின் வெற்றியை தமிழக மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்


ராகுல் காந்தியின் நடைபயணத்தின் வெற்றியை தமிழக மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்
x

ராகுல் காந்தியின் நடைபயணத்தின் வெற்றியை தமிழக மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.

திருவண்ணாமலை

ராகுல் காந்தியின் நடைபயணத்தின் வெற்றியை தமிழக மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.

வாழ்த்து

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

அவர் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதையொட்டி திருவண்ணாமலையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மண்டல ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தொடர்ந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூட்டத்தில் பேசியதாவது:-

நான் தேர்தலில் நிற்க வேண்டாம் என்று நினைத்தாலும் காங்கிரஸ் மேலிடம் சொல்லும் போது என்னால் நிற்காமல் இருக்க முடியாது.

என்னை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருமுறையும், மத்திய மந்திரியாக ஒரு முறையும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆக்கியவர் சோனியா காந்தி.

மிகப்பெரிய வெற்றி

சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கேவும், தமிழக தலைவர் அழகிரியும் நான் தான் நிற்க வேண்டும் என வலியுறுத்தியதால் இத்தேர்தலில் போட்டியிடுகிறேன்.

நான் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மிகப்பெரிய வெற்றி அடைவேன்.

இந்திய ஒற்றுமை நடை பயணம் சென்று கொண்டிருக்கும் ராகுல்காந்தி மிகப்பெரிய விஷயத்தை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறார். ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்து சென்று கொண்டிருப்பது மகத்தான சாதனை மட்டுமல்ல, மகத்தான தியாகத்தையும் செய்து கொண்டிருக்கிறார்.

மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்

பா.ஜ.க.விற்கு மிகப்பெரிய தோல்வியை கொடுக்க வேண்டும், பிரதமர் மோடியை நாட்டை விட்டு ஓட வைக்க வேண்டிய அளவில் இந்த நடைபயணத்தின் வெற்றியை காட்ட வேண்டும்.

மக்கள் காங்கிரஸ் கட்சியின் பக்கம் மீண்டும் திரும்பி இருக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் ராகுல் காந்தியின் நடைபயணம் தான்.

இந்த பயணத்தின் வெற்றியை நாம் தமிழக மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நமது கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்று ராகுல்காந்தியை நாட்டின் பிரதமராகக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story