விழுப்புரம் மாவட்டத்தில் மண்ணையும், மக்கள் மனதையும் குளிர்வித்த கோடை மழை
விழுப்புரம் மாவட்டத்தில் மண்ணையும், மக்கள் மனதையும் குளிர்வித்த கோடை மழை குளிர்வித்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக கோடை வெயில் பொதுமக்களை சுட்டெரித்து வந்தது. கூடவே அனல் காற்றும் வீசியதால் பொதுமக்கள் வாடி வதங்கினர்.
இந்த சூழலில் வெப்பச்சலனம் காரணமாக மாலை 5.30 மணியளவில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழை பலத்த மழையாக கொட்டித்தீர்க்காமல் சுமார் ½ மணி நேரமாக சாரலாக தூறிக்கொண்டே இருந்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் வழிந்தோடியது. இதேபோல் திண்டிவனம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. கோடையில் பெய்த திடீர் மழை, மண்ணையும், விவசாயிகளின் மனதையும் குளிர்வித்து சென்றது.
நெல்மூட்டைகள் சேதம்
திருவெண்ணெய்நல்லூா் பகுதியில் பெய்த மழையால், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் அதிகமாக நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல் மூட்டைகளை வைக்க இடவசதி இல்லாததால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை மாற்று இடத்தில் இயங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பசுமாடு செத்தது
விக்கிரவாண்டி அடுத்த ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் மனைவி செங்கேணி(வயது 58), இவர் நேற்று மாலை 5.45 மணி அளவில் ரவிச்சந்திரன் என்பவர் நிலத்தில் தனது பசு மாட்டை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.