முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த போலீஸ் சூப்பிரண்டு
நாகையில் சாலையோரத்தில் வலிப்பு ஏற்பட்ட முதியவருக்கு போலீஸ் சூப்பிரண்டு முதலுதவி சிகிச்சை அளித்தார்.
நாகை புதிய கடற்கரை சாலையில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு முகாம் அலுவலகம் தற்போது பழுதடைந்து உள்ளது. இதனால் வடகுடி சாலையில் உள்ள சிவசக்தி நகரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக முகாம் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், காரில் முகாம் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வெளிப்பாளையம், ராமநாயக்கன் குளத்தெரு அருகில் அவரது கார் சென்று கொண்டிருந்தபோது சாலையில் ஒரு முதியவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதை அங்கிருந்த பொதுமக்கள் கண்டும் காணாதது போல் சென்று கொண்டிருந்தனர். அதை பார்த்த போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உடனடியாக காரை நிறுத்த சொல்லி விட்டு, ஒரு போலீஸ் உதவியுடன் முதியவரை தூக்கி ஒரு கடை வாசலில் படுக்க வைத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தனது செல்போனில் தகவல் தெரிவித்து வரவழைத்தார்.பின்னர் முதியவரை ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து ஆஸ்பத்திரி கண்காணிப்பாளருக்கு போன் செய்து, முதியவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதை பார்த்த அந்தப் பகுதியில் சென்ற பொதுமக்கள், கடைக்காரர்கள் மனிதநேயத்துடன் செயல்பட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை பாராட்டினர்.