ஊட்டி மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்தது
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்து உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்து உள்ளது.
தொடர் மழை
நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் போன்ற காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் கேரளா உள்பட வெளி மாநிலங்களுக்கும், கோவை, திருப்பூர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காய்கறிகளை அறுவடை செய்த பின்னர் விவசாயிகள் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அங்கு மொத்த வியாபாரிகள் ஏலம் எடுத்து வெளியிடங்களுக்கு சரக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கின்றனர். நீலகிரியில் தொடர் மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக அறுவடைக்கு தயாராகியும், காய்கறிகளை அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் சில இடங்களில் உருளைக்கிழங்கு அறுவடை செய்யப்படாமல் உள்ளது.
வரத்து குறைந்தது
தொடர் மழையால் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்து உள்ளது. விளைநிலங்களில் உள்ள மண் தொடர்ந்து ஈரப்பதமாக இருப்பதால், காய்கறிகள் அழுகும் அபாயம் உள்ளது. காய்கறிகள் வரத்து குறைந்ததால் விலை அதிகரிக்கும் நிலை இருக்கிறது. நேற்றைய நிலவரப்படி ஊட்டி மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு கிலோ ரூ.50, கேரட் ரூ.40-ரூ.45, பீட்ரூட் ரூ.40-ரூ.50, முள்ளங்கி ரூ.20-ரூ.25, பீன்ஸ் ரூ.20-ரூ.25, முட்டைகோஸ் ரூ.10-ரூ.12, சிவப்பு நிற கோஸ் ரூ.10-ரூ.15, பட்டாணி ரூ.135-ரூ.150, டபுள் பீன்ஸ் ரூ.70, ஊட்டி அவரை ரூ.110-ரூ.140-க்கு ஏலம் போனது.
இதுகுறித்து வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜா முகமது கூறுகையில், மழை, பனிப்பொழிவால் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்து உள்ளது. இதற்கிடையே பீன்ஸ் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது. ஊட்டி மார்க்கெட் மண்டிகளுக்கு தினமும் 6 முதல் 8 டன் வரை காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தற்போது 3 டன்னாக வரத்து குறைந்து உள்ளது என்றார்.