மதுரையில் நடந்த தேசிய ஆக்கி போட்டியில் தமிழக அணி சாம்பியன்- 2-வது இடத்தை மத்திய பிரதேச அணி பெற்றது
மதுரையில் நடந்த தேசிய ஆக்கி போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 2-வது இடத்தை மத்திய பிரதேச அணி பெற்றது
ஸ்டேட் வங்கி ஊழியர்களுக்கு இடையே தேசிய அளவிலான ஆக்கி போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள சிந்தடிக் ஆடுகளத்தில் நடந்தது. அதில் இறுதி போட்டிக்கு தமிழக அணி, மத்திய பிரதேச அணி தகுதி பெற்றது. நேற்று மாலை நடந்த இறுதி போட்டியில் தமிழக அணியை எதிர்த்து மத்திய பிரதேச அணி விளையாடியது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியின் முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் தமிழக அணி சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது. 2-வது இடத்தை மத்திய பிரதேச அணியும், 3-வது இடத்தை டெல்லி அணியும் பெற்றது. சிறந்த விளையாட்டு வீரராக தமிழக வீரர் அச்சுதானந்தன் தேர்வு செய்யப்பட்டார்.
போட்டியின் நிறைவு நாளான நேற்று நடந்த விழாவில் ஸ்டேட் வங்கியின் துணை நிர்வாக இயக்குனர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத்துறை அதிகாரி ஓம் பிரகாஷ் மிஷ்ரா தலைமை தாங்கினார். பின்னர் அவர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கி கவுரவித்தார். மேலும் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்ற ஸ்டேட் வங்கி வீரர்களுக்கும், ஓய்வு பெறும் வீரர்களுக்கும் நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். இதில் தலைமை பொது மேலாளர் பவன்குமார் கேடியா, பொதுமேலாளர்கள் ராதாகிருஷ்ணா, கோவிந்த்நாராயண்கோயல், அலோக்குமார் சதுர்வேதி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.