தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு 5 லட்சம் மஞ்சப்பை வினியோகம் செய்ய இலக்கு


தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு 5 லட்சம் மஞ்சப்பை வினியோகம் செய்ய இலக்கு
x

தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு 5 லட்சம் மஞ்சப்பை வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தடுக்க, பொதுமக்களுக்கு 5 லட்சம் மஞ்சப்பைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக, மாநகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மாநகராட்சி கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் நேற்று காலை மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். துணை மேயர் ஜெனிட்டா, ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி ஒரு சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு திருவிழா காலங்களில் மதுரை, அருப்புக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். அந்த பக்தர்கள் வசதிக்காக உப்பாற்று ஓடை அருகே உள்ள 2½ ஏக்கர் நிலத்தில் கழிப்பறை, பூங்கா உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வு கூடம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் முத்துநகர் கடற்கரை பூங்காவில் உள்ள கடைகளுக்கான டென்டர் தீர்மானத்துக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது. மற்ற 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசும் போது, 25-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி சீராக இல்லை. கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும். 47-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் புதர்கள் மண்டி கிடக்கிறது. இதனால் தண்ணீர் வெளியேறுவதில் சிரமம் உள்ளது. இந்த கால்வாயை சீரமைக்கவும், விரிவு படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். டி.எம்.பி. காலனியில் பூங்கா அமைக்க வேண்டும். பக்கிள் ஓடை சுவரின் உயரத்தை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தினர்.

படகு குழாம்

கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, தூத்துக்குடி முத்துநகர் பூங்கா, படகு குழாம் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட உள்ளது. இதில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்தும் அகற்றப்படும். அதே நேரத்தில் மாநகராட்சி வருமானம் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். சாலையோரங்களில் உள்ள மணலை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இதில் மத்திய அரசு, மாநில அரசு பங்கு உள்ளது. இதற்காக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு குழு உள்ளது. இந்த குழுவினர் 2019-ம் ஆண்டு ஆஷ் நினைவு மண்டபத்தை சீரமைக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து அங்கீகரித்து உள்ளனர். 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டிடத்தில் அவ்வப்போது பராமரிப்பு பணி நடக்கிறது. அதன்படி நடந்த பராமரிப்பு பணியைத்தான் ஆய்வு செய்தோம். அதனை சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தவறான கருத்தை தெரிவித்து வருகின்றனர். இதனை அவர்களுக்கு விளக்கமாக தெரிவித்துக் கொள்கிறோம். இதையும் மீறி மாநகராட்சிக்கு அவதூறு பரப்பும் வகையில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மஞ்சப்பை

பக்கிள் ஓடையில் அதிக அளவில் பிளாஸ்டிக் பைகள் கிடந்தன. அதனை முழுமையாக அகற்றி உள்ளோம். 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு முழுவதும் தூர்வாரப்பட்டு உள்ளன. பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க உள்ளது. பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுக்கும் வகையில் மாநகராட்சி பகுதியில் 5 லட்சம் மஞ்சப்பைகள் வழங்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். பிளாஸ்டிக் பைகள் உபயோகித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி தொடங்கப்பட்டு 15-வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. உடல் ஆரோக்கியத்துக்காக சைக்கிள் ஓட்டும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. மழைக்காலத்துக்கு முன்பு மழைநீர் வடிகால்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

கூட்டத்தில் மாநகராட்சி செயற்பொறியாளர் சுரேஷ் ரூபன் பொன்னையா, உதவி செயற்பொறியாளர் சரவணன், மாநகர நல அலுவலர் அருண்குமார் மற்றும் அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கவுன்சிலர்களுக்கும் தலா 3 மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன.


Next Story