உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று தொடங்கியது.
உண்டியல் காணிக்கை
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம் மற்றும் தங்கம், வெள்ளியினால் ஆன பொருட்களை கோவில் பகுதியில் வைக்கப்பட்ட உண்டியல்களில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த மாதம் 11, 12-ந்தேதிகளில் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதன்பிறகு நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது. மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணிக்கு, கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார்.
2-வது நாளாக...
முன்னதாக கோவில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிலுள்ள பணம், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு வஸ்திரங்கள் ஆகியவை மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அவை தனித்தனியாக பிரிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கோவில் அலுவலர்கள், வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் எண்ணி அளவிடும் பணியில் ஈடுபட்டனர். இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணி 2-வது நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
--------