பஸ்சில் இருந்து தவறி விழுந்த ஆசிரியை மீது சக்கரம் ஏறியது
பஸ்சில் இருந்து தவறி விழுந்த ஆசிரியை மீது சக்கரம் ஏறியது.
உடற்கல்வி ஆசிரியை
திருச்சி வடக்கு துவாக்குடி மலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட். இவர் பெல் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரோஸ்நிர்மலா (வயது 53). இவர் திருச்சி மேலப்புதூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் தனது தாயாரின் நினைவு நாளுக்காக பூமாலை வாங்க ரோஸ்நிர்மலா திருச்சியில் உள்ள காந்திமார்க்கெட்டுக்கு நேற்று மதியம் தனியார் பஸ்சில் வந்தார். வெங்காயமண்டி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அவர் இறங்குவதற்காக முன்புற படிக்கட்டு அருகே நின்று கொண்டிருந்தார்.
பஸ்சில் இருந்து தவறி விழுந்தார்
அப்போது, பஸ்சை டிரைவர் வேகமாக சப்-ஜெயில் ரோட்டில் இருந்து மரக்கடை சாலைக்கு திருப்ப முயன்றதாக தெரிகிறது. இதில், பஸ்சுக்குள் நின்று கொண்டிருந்த ரோஸ்நிர்மலா பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார். அதற்குள் பஸ் திரும்பியதால், பஸ்சின் பின் சக்கரம் ரோஸ்நிர்மலாவின் கால்களில் ஏறி இறங்கியது. இதில் அவருடைய இரு கால்களும் நசுங்கி பலத்த காயம் ஏற்பட்டது. உடனே டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். மேலும் பஸ்சில் இருந்த கண்டக்டர் மற்றும் பயணிகளும் கீழே இறங்கினர்.
டிரைவர், கண்டக்டருக்கு தர்ம அடி
உடனே அங்கிருந்த பொதுமக்கள் தனியார் பஸ்கள் அனைத்தும் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் செல்வதாகவும், பஸ்சை பார்த்து ஓட்டக்கூடாதா? என்றும் கூறி டிரைவரையும், கண்டக்டரையும் சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அன்னம்மாள்ரெனி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் ரோஸ் நிர்மலாவை மீட்டு சிகிச்சைக்காக மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பஸ் கண்டக்டர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பொதுமக்கள் தாக்கியதில் டிரைவர் காயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து பஸ்சை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.