குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆசிரியைக்கு கத்திக்குத்து


குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆசிரியைக்கு கத்திக்குத்து
x

குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆசிரியையை கத்தியால் குத்திய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாமக்கல்

ராசிபுரம்

ஆசிரியை

எலச்சிபாளையம் அருகே உள்ள கருமாக்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 38). பட்டதாரி. இவரது மனைவி காயத்ரி (33). இவர் ராசிபுரம் டவுன் சேந்தமங்கலம் பிரிவு ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சஸ்மிதா (8), வைஸ்னவ் (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் தனித்தனியே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியை காயத்ரி அவரது குழந்தைகளுடன் சேலம் தாதகாப்பட்டியில் உள்ள அவரது தந்தை ராஜேந்திரன் வீட்டில் வசித்து வருகிறார். இங்கிருந்து அவரும் அவரது குழந்தைகளும் பள்ளிக்கு வந்து சென்று கொண்டிருந்தனர். இதற்கிடையில் ராஜாவும் அவரது மாமனார் வீட்டுக்குச் சென்று மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து வந்துள்ளார்.

கத்திக்குத்து

இந்த நிலையில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்குச் சென்ற ராஜா, அவரது மனைவி காயத்ரி, மகள் சஸ்மிதா மற்றும் மகனை கருமாக்கவுண்டம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் போகலாம் என்று கூறி அழைத்துச் சென்றார்.

அப்போது கணவன்-மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டகலூர்கேட் சக்தி நகர் அருகில் சென்றனர். மோட்டார் சைக்கிளை ராஜா நிறுத்தி விட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குழந்தைகள் எதிரிலேயே காயத்ரியை குத்தினார். அதன்பிறகு மகனை அழைத்துக்கொண்டு ராஜா மோட்டார் சைக்கிளில் தப்பித்துச் சென்றார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் காயம் அடைந்த காயத்ரியை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

விசாரணை

இது பற்றி தகவல் அறிந்த ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஹேமாவதி, சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆசிரியை காயத்ரியிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக உள்ள அவரது கணவன் ராஜாவை ராசிபுரம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். குழந்தைகள் கண் எதிரே குடும்பம் நடத்த வர மறுத்த பள்ளி ஆசிரியையை கணவரே கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story