வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி
போலீசார் விசாரணைக்கு அழைத்ததால், நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்:
போலீசார் விசாரணைக்கு அழைத்ததால், நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கூலி தொழிலாளி
அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 24), கூலி தொழிலாளி. இவர் தற்போது என்.ஜி.ஓ. காலனி, குஞ்சன்விளையில் வசித்து வருகிறார். இ்வர், புத்தளம் அருகே அரியபெருமாள் விளை காலனியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் பெண்ணுடன் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கண்ணன் நாம் தனியாக வேறு வீட்டில் வாழலாம் என்று அந்த பெண்ணை அழைத்ததாகவும், அவர் வர மறுத்ததால், தகாத வார்த்தைகள் பேசி, கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி, அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி அந்த பெண் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கண்ணன் மீது ெ்பண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர்.
கழுத்தை அறுத்தார்
இது கண்ணனுக்கு அதிர்ச்சியையும், மனவேதனையையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் கண்ணன் போலீஸ் நிலையத்துக்கு செல்லாமல் நேராக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
அங்கு சுற்றும் முற்றும் பார்த்த அவர் திடீரென தான் கொண்டு வந்த கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டார். இதனால் கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் கண்ணன் மயங்கி விழுந்தார்.
ரத்தம் சொட்ட சொட்ட...
உடனே கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து வாலிபரை மீட்டனர். மேலும் நாகர்கோவில் கோட்டாட்சியர் சேது ராமலிங்கம் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ் ஆகியோர் போலீசாருடன் சேர்ந்து கண்ணனை ரத்தம் சொட்ட சொட்ட ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் இதுபோன்ற தற்கொலை முயற்சி சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருவதால் அங்கு தினமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கலெக்டர் அலுவலகம் வரும் பொதுமக்களின் உடமைகளை சோதனை செய்த பிறகு தான் போலீசார் உள்ளே அனுமதித்து வருகிறார்கள். பெரும்பாலானோர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்வதால் மண்எண்ணெய் கேன் எதுவும் எடுத்து வருகிறார்களா? என்ற அடிப்படையிலேயே சோதனை நடந்து வருகிறது. ஆனால் கண்ணன் கத்தி எடுத்து வந்து கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருட்டு வழக்குகள்
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கண்ணனுக்கு கழுத்தில் ஐந்து தையல் போடப்பட்டது அதைத்தொடர்ந்து சிகிச்சைகள் முடிந்ததும் கண்ணன் உடனடியாக ஆஸ்பத்திரியிலிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற கண்ணன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.