தந்தையை கட்டையால் அடித்துக்கொன்ற வாலிபர்
புதுக்கோட்டை அருகே மனைவியுடன் சேர்ந்து வாழ அறிவுரை கூறிய தந்தையை உருட்டுக்கட்டையால் வாலிபர் அடித்துக்கொலை செய்தார்.
தொழிலாளி
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் உள்ள மேல சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 55). தொழிலாளி. இவரது மனைவி வைரம் (50). இவர்களுக்கு சதீஷ்குமார் (31), திருநாத் (28), சோமசுந்தரம் என்கிற அலெக்ஸ் (27) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இதில் திருநாத்துக்கு திருமணமாகி அப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார். சோமசுந்தரம் சென்னையில் பணியாற்றி வருகிறார்.
சதீஷ்குமாருக்கும் மேலமுத்துகாடு பகுதியை சேர்ந்த ரஞ்சனிக்கும் திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சதீஷ்குமாருக்கும், ரஞ்சனிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ரஞ்சனி கணவரை பிரிந்து மேலமுத்துகாடு கிராமத்தில் உள்ள அவரது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.
வாக்குவாதம்
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சந்திரமோகன், சதீஷ்குமாரிடம் ரஞ்சனியுடன் சேர்ந்து வாழ கூறியும், அவரை வீட்டிற்கு அழைத்து வர கூறியும் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து தினமும் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு சதீஷ்குமாரின் தாய் வைரம் வெட்டன்விடுதியில் உள்ள ஒரு கோவில் திருவிழாவுக்கு சென்றிருந்தார். இதனால் வீட்டில் சதீஷ்குமாரும், அவரது தந்தை சந்திரமோகனும் இருந்தனர். அப்போது சதீஷ்குமாரை, ரஞ்சனியுடன் சேர்ந்து வாழ கூறியும், அவரை வீட்டிற்கு அழைத்து வருமாறும் சந்திரமோகன் கூறியுள்ளார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் அங்கிருந்த உருட்டுக்கட்டையை எடுத்து சந்திரமோகன் பின்தலையில் தாக்கினார். இதில் காயமடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்தார். இதையடுத்து சதீஷ்குமார், அங்கிருந்து சென்று விட்டார்.
தந்தை சாவு
இந்நிலையில், இன்று காலை திருநாத்தின் மனைவி சுந்தரி மாமனார் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் ரத்தவெள்ளத்தில் கிடந்த சந்திரமோகனை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர் தனது கணவர் மற்றும் ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு விரைந்து வந்த ஆலங்குடி போலீசார் சந்திரமோகனை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சந்திரமோகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
வாலிபர் சிறையில் அடைப்பு
இதுகுறித்து திருநாத் மனைவி சுந்தரி ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தார்.
பின்னர் சதீஷ்குமாரை போலீசார் ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். தந்தையை வாலிபர் உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.