காருக்குள் வாலிபர் மர்மச்சாவு
காருக்குள் வாலிபர் மர்மச்சாவு
தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த காருக்குள் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக தனியார் நிறுவன மேலாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலாளர்
மதுரை மாவட்டம் தோப்புப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 36). இவர், தஞ்ைச மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் நடந்த நிறுவன கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கும்பகோணத்தில் இருந்து காரில் புறப்பட்டார்.
காரை தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தி விட்டு பஸ்சில் புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் கூட்டம் முடிந்து சில அலுவலக பணிகளை முடித்து விட்டு நேற்று இரவு காரை எடுத்து செல்வதற்காக தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார்.
காருக்குள் வாலிபர் பிணம்
அப்போது கார் கதவை திறப்பதற்காக சாவியை அருண்குமார் எடுத்தபோது கார் கதவு திறந்து இருந்தது. காருக்குள் பார்த்தபோது வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். உடனே இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை
அப்போது காருக்குள் பிணமாக கிடந்தவரின் மூக்கில் இருந்து ரத்தம் வந்து இருந்தது. மேலும் அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் அழுகிய நிலையில் இருந்தது. கார் கதவை திறக்கும்போது அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது.
பிணமாக கிடந்தவரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பிணமாக கிடந்தவர் யார்? அவர் காருக்குள் எப்படி வந்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கார் உரிமையாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனை முடிவில் தான் இவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.