வாலிபர் கொடூரமாக வெட்டிக்கொலை
பாணாவரம் அருகே வாலிபர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது கை, கால்களை தனித்தனியாக வெட்டி உடலின் அருகே வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த புதூர் மலைமேடு மயானத்தின் அருகே வாலிபர் ஒருவர் கை, கால்கள் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, கொலை செய்யப்பட்ட வாலிபர் கூத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் (வயது 22) என்பதும், அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. ஏற்கனவே முன்விரோதம் காரணமாக கடந்த மாதம் அவரை கொலை செய்ய முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது, அதில் தப்பித்த சரத்குமார் படுகாயங்களுடன் சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த வாரம் வீடு திரும்பினார்.
கை, கால்கள் துண்டிப்பு
இந்த நிலையில் அவரை மர்ம நபர்கள் கொலை செய்து கை, கால்களை தனித்தனியாக வெட்டி துண்டித்து உடலுக்கு அருகிலேயே போட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
கொலையாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.