லாரியில் தொங்கிய கயிறு கழுத்தில் சிக்கியதால் தூக்கி வீசப்பட்ட வாலிபர்
ஏரலில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் லாரியில் தொங்கிய கயிறு கழுத்தில் சிக்கியதால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
எரல்:
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி மாசி தெருவை சேர்ந்தவர் சங்கரசுப்பு மகன் முத்து (வயது 29). இவர் நேற்று முன்தினம் ஆழ்வார்திருநகரில் இருந்து தூத்துக்குடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் ஏரல் காந்தி சிலை அருகே சென்றபோது, எதிரே உர மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது.
அப்போது உர மூட்டைகளை கட்டி வைத்திருந்த கயிறு அவிழ்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. அந்த கயிறு எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் சென்ற முத்து கழுத்தில் சிக்கியதால், அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக லாரியும் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த முத்துவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஏரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ஜெயசேகர் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கருப்பசாமியிடம் விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே, இந்த விபத்து தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.