கொலைமுயற்சியில் தப்பித்து சிகிச்சைபெற்று திரும்பிய வாலிபர் கொடூரக்கொலை கை, கால்களை தனித்தனியாக வெட்டி உடல் அருகே வைத்து சென்றனர்
பாணாவரம் அருகே கொலை முயற்சியில் தப்பித்து சிகிச்சைபெற்று வீடு திரும்பிய வாலிபர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். அவரது கை, கால்களை தனித்தனியாக வெட்டி உடலின் அருகே வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
பாணாவரம் அருகே கொலை முயற்சியில் தப்பித்து சிகிச்சைபெற்று வீடு திரும்பிய வாலிபர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். அவரது கை, கால்களை தனித்தனியாக வெட்டி உடலின் அருகே வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
வாலிபர் வெட்டிக்கொலை
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த புதூர் மலைமேடு மயானத்தின் அருகே வாலிபர் ஒருவர் கை, கால்கள் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பாணாவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, கொலை செய்யப்பட்ட வாலிபர் கூத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் (வயது 22) என்பதும், அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. ஏற்கனவே முன்விரோதம் காரணமாக கடந்த மாதம் அவரை கொலை செய்ய முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது, அதில் தப்பித்த சரத்குமார் படுகாயங்களுடன் சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த வாரம் வீடு திரும்பினார்.
கை, கால்களை தனித்தனியாக துண்டித்தனர்
இந்த நிலையில் அவரை மர்ம நபர்கள் கொலைசெய்து, கை, கால்களை தனித்தனியாக வெட்டி துண்டித்து உடலுக்கு அருகிலேயே போட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இந்த கொடூர கொலை குறித்து தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் கொலையாளிகளை பிடிக்க இரண்டு தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தொடர்ந்து சரத்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பிச் சென்ற கொலையாளிகளை பாணாவரம் போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த கொலை சம்பவம் பாணாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.