டிக்-டாக் மூலம் பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால் வாலிபரின் திருமணம் நின்றது
டிக்-டாக் மூலம் பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால் வாலிபரின் திருமணம் நின்றது.
தேவகோட்டை,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 32 வயது வாலிபர், சிங்கப்பூரில் ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவருக்கும், அந்த பகுதியை சேர்ந்த மற்றொரு கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இந்தநிலையில் சிங்கப்பூரில் வசித்து வரும் தமிழ்ப்பெண் ஒருவர், இணையதளம் மூலம் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் ஒன்றை அனுப்பினார். அதில், டிக்-டாக்கில் வீடியோ பதிவிட்டதில் எனக்கும், அந்த வாலிபருக்்கும் காதல் மலர்ந்தது. என்னை திருமணம் செய்வதாக கூறியதை நம்பி, நாங்கள் இருவரும் இணைந்து பல டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டோம். மேலும் அந்த வாலிபர் எங்கள் வீட்டிலேயே தங்கி இருந்தார். தற்போது அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய போவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. என்னை ஆசைக்காட்டி ஏமாற்றிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து தேவகோட்டை துணை சூப்பிரண்டு கணேஷ்குமார் மேற்பார்வையில் டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் ேபாலீசார் அந்த வாலிபரை அழைத்து விசாரித்தனர்.
விசாரணையின்போது,, சிங்கப்பூரில் உள்ள அந்த பெண் ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து தன்னிடம் பழகினார். இது எனக்கு தெரிய வந்ததால் அவரிடம் இருந்து விலகி நான் சொந்த ஊருக்கு திரும்பிவிட்டேன் என்று போலீசாரிடம் கூறியுள்ளாராம். இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே இந்த தகவல் அறிந்த மணப்பெண், அந்த வாலிபருடன் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.